பட்ஜெட் பரபரப்புக்கு மத்தியில் ராகுல் காந்தியைச் சந்தித்த அமைச்சர் அன்பில்- என்ன காரணம்?
சந்திப்பின்போது புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாததால் பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை" என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பட்ஜெட் பரபரப்புக்கு மத்தியில் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்துப் பேசினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மோடி அரசாங்கத்தின் கீழ் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஏழாவது தொடர்ச்சியான பட்ஜெட் இதுவாகும். மேலும் மோடி 3.0 அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ராகுல் காந்தி சந்திப்பு
இதற்கு மத்தியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டெல்லி சென்று எதிர்க் கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது, "புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாததால் பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை" என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இன்று டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது திமுக துணைப் பொதுச் செயலாளர்- திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி., வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, சு.வெங்கடேசன், இரவிக்குமார், ஜோதிமணி, துரை.வைகோ, சசிகாந்த் செந்தில், நவாஸ் கனி, வை.செல்வராஜ், சச்சிதானந்தம், மாதேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தர்மேந்திர பிரதானைச் சந்திக்கத் திட்டம்
தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதைத் திமுக தலைமையிலான தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.