Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அரசு பள்ளி மாணவர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி X வலைதளத்தில் பதிவு.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் அபிஷேக். தந்தை இயற்கை விவசாயம் செய்து வரும் நிலையில், இவர் பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்து பள்ளிக்கு சென்று வருகின்றார். அபிஷேக் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதற்கு சுமார் 15 கிலோமீட்டர் உள்ளதால் தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்கி தருவதற்கு கேட்டுள்ளார். ஆனால் 18 வயது பூர்த்தியடையாமல் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என தந்தை இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டிலிருந்து சில பழைய பொருட்களை பயன்படுத்தி அபிஷேக் தனது சைக்கிளை பேட்டரி வாகனமாக மாற்றி உள்ளார். மேலும், பேட்டரியால் இயங்கும் இந்த வாகனத்தின் மூலம் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 30 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். ஒரு மணி நேரம் சார்ஜ் செய்வதற்கு ஒரு ரூபாய் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து அதன் மூலம் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பது தான் தனது ஆர்வம் என்றும் கூறினார்.
இதுகுறித்த தகவல் அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர் அபிஷேக் பற்றியும் அவர் வடிவமைத்த பேட்டரி மிதிவண்டி பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது X பக்கத்தில் மாணவர் அபிஷேக்கை பாராட்டி "அரசு பள்ளி மாணவர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்" எனப் பதிவிட்டார். தொடர்ந்து மாணவர் அபிஷேக்கிடம் உரையாடி வாழ்த்து தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஆணையிட்டார். அதன்படி சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவர் அபிஷேக் அவர்களின் இல்லம் சென்று அலைபேசி வழியாக அமைச்சரிடம் உரையாட வைத்தார்கள்.
"பெருமையாக இருக்கின்றது. அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக நீங்கள் திகழ்கின்றீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் தெரிவித்தால் அதை நடைமுறை செய்யலாம். இந்த செய்தியை அறிந்த முதல்வரும், துணை முதல்வரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து நன்றாக படிக்க வேண்டும்” என்று கூறி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அபிஷேக்கிடம் வாழ்த்துகள் தெரிவித்தார்.