நீட்டிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை அவகாசம்; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்!
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின்படி, 26.08.2025 முதல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடங்கும்.

எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2025 அன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 20ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த கால அவகாசம் 15.09.2025 வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2025 முதல் தொடங்கப்பட்டது. மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 26 முதல் மாணவர் சேர்க்கை
மேற்படி விண்ணப்பப் பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின்படி, 26.08.2025 முதல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடங்கும். இதன் விவரம் SMS மற்றும் e-mail மூலம் மாணாக்கர்களுக்கு அனுப்பப்படும்.
வகுப்புகள் எப்போது?
முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் தொடங்க உள்ளன.
எம்.எட். சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 15.09.2025 வரை மாணாக்கர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு: www.tngasa.in
மாணவர்கள் https://med.tngasa.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
தொலைபேசி எண்கள்: 044 - 24343106
044 - 24342911
இ மெயில் முகவரி: tngasa2025@gmail.com























