Minister Ponmudi: பொறியியல் படிக்க கணிதம் கட்டாயம்: செப்டம்பரில் மாநில கல்விக் கொள்கை வெளியீடு- அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் பொறியியல் படிக்க கணிதம் கட்டாயம் அவசியம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி, செப்டம்பருக்குள் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிக்க கணிதம் கட்டாயம் அவசியம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி, செப்டம்பர் மாதத்தில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி மதியம் 12.30 மணிக்கு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இரு மொழிக் கொள்கை
இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது . தேசிய கல்விக்கொள்கையின்படி 4 ஆண்டுகள் பட்டப் படிப்புகள், ஓராண்டு படிப்புகள் ஆகியவை தமிழ்நாட்டில் இருக்காது. இங்கு 10+2+3 என்ற பள்ளி, கல்லூரி அமைப்பு முறையில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதுவே அமலில் இருக்கும்.
மாநில கல்விக் கொள்கை
200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் யாரேனும் மருத்துவக் கலந்தாய்வுக்குச் செல்லலாம். இதில் 32 பேர் அறிவியல் மாணவர்கள். அதனால் ஜூலை 2ஆம் வாரம் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்கிய பிறகு, பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். வரும் செப்டம்பர் மாதத்தில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும்.
ஒட்டுமொத்தமாக 1,76,744 மாணவர்களுக்கு தரவரிசை வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் 405 பேர் வெளிமாநில மாணவர்கள் ஆவர். 1,57,661 மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்திருக்கின்றனர். அதேபோல 20,084 பேர் மத்தியப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் ஆவர். 830 பேர் மற்ற மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் ஆவர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரவரிசைப் பட்டியல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 5842 மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும்25 சதவீத அளவுக்கு அதிகமாகும். இது புதுமைப் பெண் திட்டத்துக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
தரவரிசைப் பட்டியலில் புகார் ஏதேனும் இருந்தால், மாணவர்கள் 5 நாட்களுக்குள் (ஜூன் 30) ஆன்லைனிலேயே விண்ணப்பித்து சரிசெய்து கொள்ளலாம்’’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மாணவர்கள் https://static.tneaonline.org/docs/Academic_Rank_List.pdf?t=1687764500997 என்ற இணைப்பை க்ளிக் செய்து, மாணவர்களின் பொது தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம்.
அதேபோல, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ரானுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், பொதுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கு பொதுவாகவும் 7.5% இட ஒதுக்கீட்டிலும் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை https://www.tneaonline.org/ என்ற இணைப்பில் காணலாம்.