Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!
Madras University Convocation 2024: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக, துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை அரங்கில் இன்று (செப். 24ஆம் தேதி) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். உயர் கல்வித்துறை அமைச்சரும் இணை வேந்தருமான பொன்முடி கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர் யார்?
இந்திய அணு சக்திக் கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமிபாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான அனில் ககோத்கர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று, உரையாற்றினார்.
1.06 லட்சம் மாணவர்களுக்குப் பட்டம்
இன்றைய பட்டமளிப்பு விழாவில், 1,06,789 மாணவர்கள் பல்வேறு வகையான பட்டங்களை இன்று பெற்றனர். மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், மேலாண்மை அறிவியல், கல்வியியல், கலை படிப்புகள், இந்திய மொழிகள், நுண் கலை ஆகிய படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
முதல்முறையாக துணை வேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா
சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வருடமாக துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. ஒருங்கிணைப்புக் குழுவே தற்போதைய பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இதில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 167 ஆண்டு கால சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில், முதல் முறையாகத் துணை வேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.