பள்ளி மாணவர்களிடையே ஆங்கில மொழித் திறனை வளர்க்க LEVEL UP திட்டம்: மாதாந்திர இலக்கு வெளியீடு!
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின், ஆங்கில மொழியில் வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படைத் திறன்களை முறையாக மேம்படுத்த LEVEL UP என்ற திட்டம் அறிமுகம்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் LEVEL UP திட்டத்தின் கீழ் மாத வாரியான மொழித்திறன் இலக்குகள் தொடர்பாகவும் ஜூலை மாதத்திற்கான திறன் வளர் செயல்பாடுகள் அட்டவணை வெளியிடுதல் பற்றியும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
அது என்ன LEVEL UP திட்டம்?
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின், ஆங்கில மொழியில் வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படைத் திறன்களை முறையாக மேம்படுத்துவதற்கான LEVEL UP என்ற தன்னார்வத் திட்டத்தினை அறிமுகம் செய்து, தொடர் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் அடிப்படை மொழித்திறன்கள் மேம்படுவதற்கான மாதவாரியான இலக்குகள் மற்றும் செயல்பாடுகள் முறையாக நிர்ணயிக்கப்பட்டு, அவை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளன.
அவ்வகையில், ஜூன் மாதத்திற்கான மொழித்திறன் இலக்குகள் மற்றும் செயல்பாடுகள் கொண்ட அட்டவணை வெளியிடப்பட்டு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இச்செயல்பாடுகள் மற்றும் இலக்குகளின் அடைவை உறுதிபடுத்தும் வகையில் உரிய கால இடைவெளிகளில் பள்ளிகளில் ஆய்வு செய்யப்படும்.
இந்நிலையில், ஜூன் மாதத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து ஜூலை மாதத்தின் நான்கு வாரங்களுக்கான அடிப்படை ஆங்கில மொழித் திறன்வளர் இலக்குகள் மற்றும் கற்றல் செயல்பாடுகள் தற்போது வெளியிடப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் மொழித்திறன் இலக்கு
2025-26 ஆம் கல்வியாண்டில், அரசுப்பள்ளி மாணவர்கள் ஜூன் 2025 முதல் டிசம்பர் 2025 வரையுள்ள ஏழு மாதங்களில் ஆங்கில மொழியின் நான்கு அடிப்படைத் திறன்களை எளிதாக அடையும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் அதன் மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் அடுத்து வரும் மாதத்திற்கான மொழித்திறன் இலக்குகள் கொண்ட அட்டவணை வெளியிடப்படும்.
மாணவர்களின் அடிப்படைத் திறன்களின் முன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு, அனைத்து மாணவர்களும் செயல்பாடுகளில் பங்கு பெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்படுகிறது.
ஜூன் மாத மொழிவளர் திறன் அட்டவணை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு அதன் இலக்குகள் அடையப் படுவதை உறுதி செய்வதோடு, முழுமையான அடிப்படை மொழித்திறன் அடைவிற்காக குறிப்பாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மேற்கொள்ளக் கூடிய மற்ற கற்றல் செயற்பாடுகளுடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறையால் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் அட்டவணைக்கேற்ப அடிப்படை ஆங்கில மொழி வளர் செயல்பாடுகளை ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்வதை ஊக்குவித்து, அனைத்து மாணவர்களும் அடிப்படை மொழித் திறன்களை பெற உரிய வழிகாட்டுதல்கள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உரிய கால இடைவெளிகளில் மீளாய்வு
மேலும், இத்திட்டம் சார்ந்து ஆசிரியர்களின் கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் மொழித் திறன் வளங்களைக் கொண்ட வலைத்தளம் https://sites.google.com/view/tnlevelup ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மாதத்திற்கும் நான்கு வாரங்களுக்கான மொழித்திறன் இலக்குகள் அவ்வலைப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித் திறன் அடைவு குறித்து உரிய கால இடைவெளிகளில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.





















