CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
பள்ளிக் குழந்தைகளைத் தொடர்ச்சியாகப் புதிய கல்வித் திட்டங்களுக்கான "பரிசோதனை எலிகளாக" மாற்றுவதா என்று பெற்றோர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ள விவகாரம் தற்போது கல்வித்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் என்சிஆர்எஃப் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சிபிஎஸ்இ இந்தப் புதிய மாற்றத்தை முன்மொழிந்துள்ளது.
தற்போதைய கல்வி நடைமுறைப்படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகள் உட்பட மொத்தம் ஐந்து முக்கியப் பாடங்களைப் படித்து வருகின்றனர். ஆனால், புதிய சிபிஎஸ்இ முன்மொழிவின்படி, இனி மாணவர்கள் மூன்று மொழிகள் உட்பட மொத்தம் ஆறு பாடங்களைக் கட்டாயம் படிக்க வேண்டியிருக்கும்.
இரண்டு இந்திய மொழிகள்
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் கட்டாயம் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீக மொழிகளாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ-யின் இந்தத் திட்டத்திற்குப் பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளிக் குழந்தைகளைத் தொடர்ச்சியாகப் புதிய கல்வித் திட்டங்களுக்கான "பரிசோதனை எலிகளாக" மாற்றுவதா என்று பெற்றோர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே கடினமான பாடத்திட்டங்களால் மாணவர்கள் அதிக அளவிலான மன அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றனர்.
கல்விச் சுமையை பன்மடங்கு அதிகரிக்கும்
இந்தச் சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நெருங்கும் முக்கியமான கட்டமான ஒன்பதாம் வகுப்பில், திடீரெனக் கூடுதலாக ஒரு மொழியைக் கற்க வேண்டும் எனச் சுமத்துவது மாணவர்களின் கல்விச் சுமையை பன்மடங்கு அதிகரிக்கும் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திடீரெனப் புதிய மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், மாணவர்களின் கவனம் சிதறும் என்றும், இது அவர்களது ஒட்டுமொத்த மதிப்பெண்களையும் தேர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் பெற்றோர்கள் தங்கள் கவலையைப் பதிவு செய்துள்ளனர். பன்மொழித் திறனை வளர்க்கும் நோக்கில் சிபிஎஸ்இ இந்தத் திட்டத்தை முன்மொழிந்திருந்தாலும், இது நடைமுறைச் சாத்தியமற்றது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அண்ணாமலை கண்டனம்
‘’2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்’’ என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















