ஜேஇஇ தேர்வு: மார்ச் 31 விண்ணப்பிக்க கடைசி தேதி - கவனத்தில் கொள்ள வேண்டிய மாற்றப்பட்டுள்ள விதிகள்!
இக்கட்டுரையில் ஜேஇஇ தேர்வு மற்றும் புதிய நடைமுறைகள் குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்த தகவல்கள் இருக்கிறது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ.) நேற்று வெளியிட்டது. இதில் ஜே.இ.இ. முதற்கட்ட தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடக்கிறது. 2-ம் கட்ட தேர்வு மே மாதம் 24 முதல் 29 வரை நடக்கிறது. முதற்கட்ட தேர்வை எழுத விருப்பமுள்ளவர்கள் வருகிற 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வு தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்ப இருக்கிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தாண்டு முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்:
- கடந்த ஆண்டைப் போல் அல்லாமல், ஜே.இ.இ. மெயின் 2022 தேர்வு இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக மட்டுமே நடத்தப்படும். ஏற்கனவே நான்கு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டில் இருந்து இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
- இந்த ஆண்டு, ஜேஇஇ முதன்மைத் தேர்வின் பிரிவு A (MCQ) மற்றும் பிரிவு B (எண்கள்) ஆகிய இரண்டிலும் நெகடிவ் மதிப்பெண்கள் (Negative Mark) இருக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு பிரிவுகள் இருக்கும். பிரிவு பி- இல் கேள்விகள் இருக்கும். அதன் பதில்கள் எண் மதிப்பாக நிரப்பப்பட வேண்டும். பிரிவு பி இல், விண்ணப்பதாரர்கள் 10-ல் ஏதேனும் 05) கேள்விகளை முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மொத்தம் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் மற்றும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.
- விண்ணப்பிப்போரின் பதிவு செயல்முறையை எளிதாக்க, மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளது. நிலை 1 இல், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். நிலை 2 இல், விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்புதல், துறை சார்ந்த பிரிவிற்கு விண்ணப்பித்தல், தேர்வு நகரங்களைத் தேர்வு செய்தல், கல்வித் தகுதி விவரங்களை வழங்குதல் மற்றும் புகைப்படம் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றுதல் உள்ளிட்ட விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். நிலை 3 - விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பிக்கும் போது, முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நான்கு நகரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு மைய நகரங்களின் தேர்வு நிரந்தர முகவரி அல்லது தற்போது வசிக்கும் முகவரி ஆகிவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்படு, அதன் அடிப்படையில் மட்டுமே வரையறுக்கப்படும்.
- பார்வையற்றவர்கள் தேர்வு எழுதும் நிலையில், அவர்களுக்குத் தேவையான ஸ்க்ரைப் தேசிய தேர்வு முகமையால் மட்டுமே வழங்கப்படும். தேர்வர்கள் சொந்தமாக தேர்வு எழுத யாரையும் அழைத்து வர அனுமதி இல்லை.