JEE Main 2025: ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; நவ.22 கடைசி- எப்படி?
ஜேஇஇ மெயின் தேர்வுக்கு தேர்வர்கள் நவம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அன்று இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஜேஇஇ மெயின் எனப்படும் பொறியியல் கூட்டு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. இதற்குத் தேர்வர்கள் நவம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அன்று இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் வழியாக கிரெடிட்/ டெபிட் / நெட் பேங்க்கிங் / யூபிஐ மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை நவ.22 இரவு 11.50 வரை மேற்கொள்ளலாம்.
தேர்வு மையங்கள் குறித்த விவரம் 2025 ஜனவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிக்கு 3 நாட்கள் முன்னதாக, ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.
தேர்வு எப்போது?
ஜேஇஇ மெயின் எனப்படும் நுழைவுத் தேர்வு ஜனவரி 22 முதல் 31 வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளன. தேர்வு 13 மொழிகளில் அதாவது ஆங்கிலம், தமிழ், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தியன், பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகியவற்றில் நடைபெற உள்ளது.
2025- 26ஆம் கல்வி ஆண்டில், 2025 ஜேஇஇ மெயின் தேர்வுகள் இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளன. முதல் அமர்வு 2025 ஜனவரி மாதத்திலும் இரண்டாம் அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெற உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் போதிய விவரங்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்கலாம்.
* எனினும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியது முக்கியம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/
தொலைபேசி எண்: 011- 40759000
இ- மெயில்: jeemain@nta.ac.in