Mask in Schools: பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்..
பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் சிலம்ப விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:
''பொதுத்துறை பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்படும் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் போட்டியையும் விளையாட்டு சேர்த்து முதலமைச்சர் அரசாணை வெளியிட்டார். தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் விளையாட்டு நகரம்
விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். தமிழகத்தில் நான்கு ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விளையாட்டு நகரம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளிலும் சிலம்பம் விளையாட்டை ஊக்குவிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அனைத்துத் தரப்பிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சேர்க்கை நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனினும் அதை முறைப்படுத்தும் வகையில் சுற்றறிக்கையை அனுப்பத் திட்டமிட்டு வருகிறோம். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும்
கொரோனா தொற்று நேரத்தில், ஓராண்டு காலத்தில் 6 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியை நம்பி வந்திருக்கின்றனர். கண்டிப்பாக இந்த முறையும் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முகக்கவசம் கட்டாயமா?
பள்ளி மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் சுகாதார துறையிடம் இருந்து இதுவரை வரவில்லை. முதலமைச்சர் அலுவலகம் அளிக்கும் அறிவுறுத்தலை நாங்கள் பின்பற்றுவோம்''.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முன்னதாகப் பள்ளிகள் திறப்பிற்குப் பிறகு மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்