Schools at 5 30 AM: இந்தோனேசியாவில் அதிகாலை 5.30 மணிக்குப் பள்ளி; கதறும் மாணவர்கள், பெற்றோர்கள்!
இந்தோனேசியப் பள்ளிகளில் முன்னோடித் திட்டமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகாலை 5.30 மணிக்குப் பள்ளி தொடங்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தோனேசியப் பள்ளிகளில் முன்னோடித் திட்டமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகாலை 5.30 மணிக்குப் பள்ளி தொடங்கப்பட்டு வரும் நிலையில், இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
பதின் பருவத்தினரையும் காலை தூக்கத்தையும் பிரிக்க முடியாது. இரவு நீண்ட நேரம் கண் விழிக்கும் அவர்கள், காலையில் தாமதமாக எழுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான டீன்கள் இதையே பின்பற்றி வருகின்றன. இந்த நிலையில், இந்தோனேசிய அரசு குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகாலை 5.30 மணிக்கு வகுப்புகளைத் தொடங்கியுள்ளது.
கிழக்கு நுசா மாகாணத்தின் தலைநகரம் குபாங்கில் உள்ள 10 பள்ளிகளில் முன்னோடித் திட்டமாக, இது தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆளுநர் விக்டர் லைஸ்கோடாட் வெளியிட்ட உத்தரவின்படி, குழந்தைகளின் ஒழுக்கத்தை வலிமைப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் திட்டத்துக்கு மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாலையில் பள்ளி தொடக்கம் என்பதால், உறக்கத்தை விடுத்து படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். அந்த நேரத்துக்கு பைக், கார் டாக்ஸிகள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து 16 வயது மாணவியின் தாய் ராம்பு அட்டா கூறும்போது, ’’அதிகாலையில் கும்மிருட்டாக இருக்கும்போதே மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது மிகவும் கடினமாகவும் பயமாகவும் இருக்கிறது. இதை என்னால் ஏற்க முடியாது.
என் மகள் யுரேகா தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுகிறாள். பள்ளி முடிந்து மிகுந்த அசதியோடு வீடு திரும்புகிறாள். வந்ததும் தூக்கம் வருகிறது என்று உறங்கச் செல்கிறாள். மாணவிகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்
இதுகுறித்து நியூஸா செண்டானா பல்கலைக்கழகத்தின் கல்வி நிபுணர் மார்சல் ரோபோட் கூறும்போது, ’’அதிகாலையில் பள்ளிகளைத் திறப்பதற்கும், கல்வியின் தரத்தை மேம்படுத்தும் முயற்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக இந்தோனேசியாவில் காலை 7 முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிய மாற்றம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அசெளகரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து, பள்ளி நிர்வாகமும் அரசும் பள்ளி திறக்கும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் படிக்க: 12th ECONOMICS Question Bank: பிளஸ் 2 பொருளியல் பாடத்தில் சூப்பர் மதிப்பெண்கள் பெறலாம்- மாதிரி வினாத்தாள் இதோ!
மேலும் படிக்க: Madras University Result: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது?- காத்துக்கிடக்கும் மாணவர்கள்