IIT Bombay Placements: ஐஐடியில் 22 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம்; சராசரி எவ்வளவு தெரியுமா?
ஆட்சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்த 2,414 மாணவர்களில், 1,979 பேர் கலந்துகொண்டனர். இதில், 1,475 மாணவர்கள் ஆஃபர்களை ஒப்புக் கொண்டனர்.
2023- 24ஆம் ஆண்டுக்கான பிளேஸ்மெண்ட் அறிக்கையை ஐஐடி மும்பை வெளியிட்டுள்ளது. இதில், 22 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இவர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.23.5 லட்சம் ஆக உள்ளது.
அந்த அறிக்கையின் முழு விவரம் இதோ:
’’ஆட்சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்த 2,414 மாணவர்களில், 1,979 பேர் கலந்துகொண்டனர். இதில், 1,475 மாணவர்கள் ஆஃபர்களை ஒப்புக் கொண்டனர். இவர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.23.5 லட்சம் ஆக உள்ளது. அதாவது மாதம் சுமார் 2 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியம்
22 மாணவர்கள் 1 கோடி ரூபாய் மற்றும் அதற்கு அதிகமான ஊதியத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். அதேபோல சர்வதேச வேலைவாய்ப்பு 78 பேருக்குக் கிடைத்துள்ளது. 364 நிறுவனங்கள் மொத்தம், 1,650 வேலைகளை அளித்திருக்கின்றன.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்து அதிக அளவிலான வேலைவாய்ப்பு பெறப்பட்டுள்ளது. பி.டெக். படிப்பைப் பொறுத்தவரை 83.39 சதவீத அளவுக்கு மாணவர்கள் பிளேஸ் ஆகியுள்ளனர். எம்.டெக். படிப்பில், 83.5 சதவீதமும் எம்எஸ் ஆராய்ச்சி படிப்பில், 93.33 சதவீதமும் வேலை கிடைத்துள்ளது. இரட்டைப் பட்டப் படிப்பில் (BTech and MTech) 79.16 சதவீத அளவுக்கு பிளேஸ்மெண்ட் பதிவாகி உள்ளது.
எந்த பொறியியல் படிப்புக்கு அதிக வேலைவாய்ப்பு?
எலக்ட்ரிக்கல் எனப்படும் மின்னணுவியல் பொறியியல் படிப்பில் அதிகபட்சமாக 232 வேலை கிடைத்துள்ளது. 2ஆவதாக கணினி அறிவியல் படிப்புக்கு 230 ஆஃபர்களும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்புக்கு 229 ஆஃபர்களும் கிடைத்துள்ளன.
ஜப்பான், தைவான், ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 78 சர்வதேச வேலைகள் கிடைத்துள்ளன. இது கடந்த ஆண்டை விட 65 அதிகமாகும்’’.
இவ்வாறு ஐஐடி பாம்பே தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஐஐடி பாம்பே முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில், இங்கு படித்த அனைவருக்குமே சராசரியாக மாதத்துக்கு 2 லட்சம் ரூபாய் ஆரம்ப சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.