ஐஐடி மும்பை அதிரடி: ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் புது சான்றிதழ் படிப்பு அறிமுகம்- பங்கேற்பது எப்படி?
ஐஐடி மும்பை பேராசிரியர்களால் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐடி மும்பை, ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) குறித்த சிறப்புச் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கிரேட் லேர்னிங் என்ற கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.
5 மாத ஆன்லைன் படிப்பு
ஐஐடி மும்பையின் 'டெக்னோகிராஃப்ட் சென்டர் ஃபார் அப்ளைடு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' மையத்தின் மூலம் இந்த ஐந்து மாத கால ஆன்லைன் படிப்பு நடத்தப்படும். ஐஐடி மும்பை பேராசிரியர்களால் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டிவ் ஏஐ செயலிகளை உருவாக்குதல், அவற்றைச் சீரமைத்தல் மற்றும் செயல்படுத்துதல் போன்ற திறன்கள் இதில் கற்பிக்கப்படும்.
யாரெல்லாம் சேரலாம்?
மென்பொருள் பொறியாளர்கள், தரவு ஆய்வாளர்கள் (Data Scientists), தயாரிப்பு மேலாளர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (STEM) பட்டதாரிகள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பயனடையலாம்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இளங்கலைப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான சிஜிபிஏ (CGPA) பெற்றிருப்பது அவசியமாகும்.
பாடத்திட்டம் என்ன?
இந்தப் படிப்பு ஐந்து நிலைகளாக (Modules) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏஐ (AI) மற்றும் பெரிய மொழி மாதிரிகளின் (Large Language Models - LLMs) அடிப்படைகள் முதல், புராம்ப்ட் டிசைன், சொந்தத் தரவுகளைப் பயன்படுத்தி மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் மல்டி ஸ்டெப் ஒர்க்ஃபுளோஸ் போன்ற சிக்கலான தொழில்நுட்பங்கள் வரை விரிவாகக் கற்பிக்கப்படும்.
சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு
இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஐஐடி மும்பை வழங்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும். நவீன தொழில்நுட்ப உலகில் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறவும், தங்களது தொழில்முறைத் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் விரும்புவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
ஏஐ துறையில் தடம் பதிக்க விரும்பும் ஆர்வலர்கள் கூடுதல் விவரங்களுக்கு ஐஐடி மும்பையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். https://www.mygreatlearning.com/iit-bombay-certificate-generative-ai?utm_source=PressRelease&utm_medium=NewsCoverage&utm_campaign=IITB_PR_JAN6&utm_id=PR&utm_term=GenAI+&utm_content=coverage என்ற இணைப்பில் இதுதொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: +918046801968






















