ICC: அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு கட்டாயம்; விதிமுறைகள் வெளியீடு- என்னென்ன?
இந்தச் சட்டத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ளக புகார் (Internal Complaints Committee — ICC ) கட்டாயம் அமைத்திட வேண்டும்.
அனைத்து வகையான பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் அண்மையில் அறிவுறுத்தி இருந்த நிலையில், அதற்கான விதிமுறைகள் மீண்டும் நினைவூட்டப்பட்டு உள்ளன.
அனைத்து வகைப் பள்ளிகளிலும் எற்படும் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்திட போக்சோ (Prevention Of Children from Sexual Offences Act ) 2012 மற்றும் பாதுகாக்கும் சட்டம் 2013 சட்டத்தினை மாநில அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படுத்தி வருகிறது.
இந்தச் சட்டத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ளக புகார் குழுவை (Internal Complaints Committee — ICC ) கட்டாயம் அமைத்திட வேண்டும்.
தங்கள் பள்ளிகளில் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும், புகார் தெரிவிக்கவும், விசாரணை மேற்கொள்ளவும் தங்கள் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ளக புகார் குழுவானது உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அதன் விவரத்தினை ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குழு உறுப்பினர்களை கீழ்க்காணும் விவரப்படி தேர்ந்தெடுத்து அமைக்க அறிவுறுத்தப்படுகிறது.
1) குழுத் தலைவர் கட்டாயமாக பெண் உறுப்பினராக ஒருக்க வேண்டும். அவர் பெண் தலைமை ஆசிரியர் / மூத்த பெண் ஆசிரியர் ஆக இருக்க வேண்டும்.
2) இரண்டாவது மற்றும் மூன்றாவது உறுப்பினர்கள் பள்ளியில் உள்ள பெண் / ஆண் ஆசிரியர்கள் இடம் பெற வேண்டும்
3) நான்காவது உறுப்பினர் மருத்துவர் / வழக்கறிஞர் / NGO Members இவர்களில் ஒருவர் இடம்பெற வேண்டும்
4) உறுப்பினர்களில் 50% குறைவில்லாமல் பெண் உறுப்பினர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை தலைமைச் செயலாளர் முருகானந்தம் நடத்தி இருந்தார். அதில், அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
புகார்களை அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க Anti drug club-களை ஏற்படுத்த வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.