பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர, ரத்துசெய்யப்படாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்..
ஆசிரியர் சங்கம், கல்வியாளர்கள் என அனைவரிடமும் ஆலோசனை நடத்தினோம். தேர்வு கண்டிப்பாக நடத்தவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது..
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வியாளர்கள், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ’ஆசிரியர் சங்கம் கல்வியாளர்கள் என அனைவரிடமும் ஆலோசனை நடத்தினோம். தேர்வு கண்டிப்பாக நடத்தவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது. தேர்வு எப்படி நடத்தவேண்டும் என முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ எனக் கூறினார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ”கொரோனா எப்போது குறையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை கூறும் என எதிர்பார்க்கிறோம். பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமே தவிர, ரத்துசெய்யப்படாது” எனத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு இந்த காலக்கட்டங்களில் அவர்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை ஆலோசித்து வருவதாகவும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் என்றும், தேர்வு நடத்தினால் தேவையான அளவு கால அவகாசம் கொடுத்தே தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.