Arts College UG Admission: மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே... அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி!
Govt Arts and Science College UG Admission 2023: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.
TN Arts College Admission: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி என்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் மொத்தம் 1,07,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து கல்லூரிகளில் சேர்ந்தனர்.
தனித்தனி தரவரிசைப் பட்டியல்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர் சேர்க்கைக்கு தமிழ் வழிப் பட்டப்படிப்புகளுக்கு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
நடைபெற்ற கலந்தாய்வு
அதனை அடுத்து சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. மே 30ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வு நடைபெற்றது. அதேபோல, ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 2ஆம் கட்ட பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதை அடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், சென்னை மாநிலக் கல்லூரி உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில் காலி இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.14) கடைசித் தேதி ஆகும். குறிப்பாக 10,372 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
மாணவர்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://tngasa.org மற்றும் https://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
தொடர்ந்து லாகின் செய்து, போதிய விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
கல்லூரிகளைத் தேர்வு செய்து, கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டண விவரம்
ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்:
விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/-
பதிவுக் கட்டணம் - ரூ.2/-
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு- விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை
பதிவுக் கட்டணம் - ரூ.2/- மட்டும்
காலி இடங்கள் குறித்து முழுமையாக அறிய: https://static.tneaonline.org/docs/arts/UG-VACANCY-2023.pdf?t=1694669587869 என்ற இணைப்பைக் க்ளிக் செய்ய வேண்டும்.