Governor RN Ravi: மேடையில் காத்திருந்த ஆளுநர்! புறக்கணித்த துணை வேந்தர்கள்! பின்னணியில் தமிழக அரசு?
உதகமண்டலத்தில் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டைக் கண்டித்து, ஏராளமானோர் கருப்புக் கொடி காட்டினர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை, பெரும்பாலான துணை வேந்தர்கள் புறக்கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த 3 ஆண்டுகளாக உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். நான்காவது ஆண்டாக, துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. 2 நாள் பெறும் இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று பங்கேற்கிறார்.
துணைவேந்தர்களுக்கு அழைப்பு
இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை, பெரும்பாலான துணை வேந்தர்கள் புறக்கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 41 துணை வேந்தர்களில் 32 பேர் மாநாட்டைப் புறக்கணித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநாட்டில் பங்கேற்றது யார்?
குறிப்பாக அரசு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களில் பெரும்பாலானோர் புறக்கணித்தனர். மத்திய அரசு பல்கலைகழகங்கள் மற்றும் சில தனியார் பல்கலை. துணை வேந்தர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். திருநெல்வேலி, மதுரை, கொடைக்கானல், நாகை, கோவை, காரைக்குடி ஆகிய பல்கலைக்கழகப் பதிவாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை. காருண்யா நிகர்நிலைப் பல்கலை. வேந்தரும் மாநாட்டுக்குச் செல்லவில்லை.
மாநாட்டில் சென்னை ஐஐடி, திருச்சி என்ஐடி, தஞ்சை வேளாண் பல்கலைக்கழகம், திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல விஐடி, சென்னை சவீதா பல்கலை., சிவ் நாடார் பல்கலைக்கழகம் சார்பிலும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்
இதற்கிடையே உதகமண்டலத்தில் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டைக் கண்டித்து, ஏராளமானோர் கருப்புக் கொடி காட்டினர். சென்னையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மத்தியில் மாநாடு
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி மீது, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியது.
அதில், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கியது. மேலும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா உட்பட நிலுவையில் இருந்த 10 மசோதாக்களும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் துணை வேந்தர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் நடத்தினார். தொடர்ந்து தற்போது ஆளுநர் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.





















