GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 Exam: 2026ஆம் ஆண்டு கேட் தேர்வு பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 15, 2026 வரை நடைபெற உள்ளது. தேர்வுகள் இரண்டு ஷிஃப்டுகளில் நடத்தப்படும்.

ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கவுஹாத்தி, கேட் எனப்படும் பட்டதாரி பொறியியல் தகுதித் தேர்வு (GATE) 2026-க்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு தேதிகளை கீழே காணலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளமான gate2026.iitg.ac.in என்ற இணைய முகவரியைப் பார்வையிட்டு தேர்வு தேதிகளை சரிபார்க்கலாம்.
எதற்காக இந்தத் தேர்வு?
முதுகலை பொறியியல் தேர்வுகளில் சேர கேட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம், கலை மற்றும் மனிதநேயத் துறைகளில் முதுகலை திட்டங்களில் மாணவர் சேர்க்கைக்கு இந்த தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு அவசியமாக உள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நான்கு நாட்கள் கேட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் என 2 அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இது விண்ணப்பதாரர்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக ஐஐடி கவுஹாத்தி தெரிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை
2026ஆம் ஆண்டு கேட் தேர்வு பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 15, 2026 வரை நடைபெற உள்ளது. தேர்வுகள் இரண்டு ஷிஃப்டுகளில் நடத்தப்படும்:
- முற்பகல்: காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.
- பிற்பகல்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் இந்தியா முழுவதும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மேலும் முடிவுகள் மார்ச் 19, 2026 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு நாட்கள் மற்றும் பாடங்கள்:
- சனிக்கிழமை, பிப்ரவரி 7, 2026:
- முற்பகல்: விவசாயப் பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல், புவியியல் மற்றும் புவி இயற்பியல், கருவிப் பொறியியல், கணிதம், சுரங்கப் பொறியியல், ஜவுளிப் பொறியியல் மற்றும் இழை அறிவியல், பொறியியல் அறிவியல் மற்றும் உயிரி அறிவியல்.
- பிற்பகல்: விண்வெளிப் பொறியியல், உயிரித் தொழில்நுட்பம், இரசாயனப் பொறியியல், வேதியியல், புவிசார் பொறியியல், இயற்பியல் மற்றும் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல்.
- ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 8, 2026:
- காலை அமர்வு: கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தாள் 1 மற்றும் புள்ளியியல்.
- மாலை அமர்வு: கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தாள் 2, சூழலியல் மற்றும் பரிணாம வளர்ச்சி, கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல் பொறியியல் மற்றும் உற்பத்தி மற்றும் தொழில்துறை பொறியியல்.
- சனிக்கிழமை, பிப்ரவரி 14, 2026:
- முற்பகல்: சிவில் இன்ஜினியரிங் தாள் 1, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தி மற்றும் தொழில்துறை பொறியியல்.
- பிற்பகல்: பயோமெடிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் தாள் 2, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மெட்டலார்ஜிகல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்.
- ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 15, 2026:
- முற்பகல்: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்.
- பிற்பகல்: கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் மற்றும் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் தேர்வு முடிவடைகிறது.
தேர்வு அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்கவும் புதுப்புது அப்டேட்டுகளுக்கும் கேட் தேர்வுக்கான https://gate2026.iitg.ac.in/ என்ற இணையதளத்தைச் சரிபார்க்கவும்.






















