இன்றே கடைசி; பொறியியல் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிமுறைகள் இதோ!
கேட் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேரலாம். அரசு வேலைக்கும் செல்லலாம்.
பொறியியல் கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.3) கடைசித் தேர்வு ஆகும்.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்குச் சேரவும் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேரவுக் கேட் எனப்படும் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (Graduate Aptitude Test in Engineering - GATE) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு ஐஐடி சார்பில் நடத்தப்பட்டு வரும் நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வை, ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது. கேட் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேரலாம்.
ஆன்லைனில் கேட் தேர்வு
கணினி மூலம் இணைய வழியில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்
நீட்டிக்கப்பட்ட அவகாசம்
கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 26ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்தது. எனினும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.
விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?
* மாணவர்கள் https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவேண்டும்.
* அதில், Apply Online என்ற தெரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
* அல்லது நேரடியாக https://goaps.iitr.ac.in/login என்ற இணைப்பையும் தேர்வு செய்யலாம்.
* முன்பதிவு செய்யாத நிலையில், முதலில் Registration பகுதியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
* தொடர்ந்து, இ- மெயில் முகவரி, கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம்.
அதே நேரத்தில் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
கூடுதல் விவரங்களை https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.