Free Breakfast Scheme: கைமாறும் காலை உணவு திட்டம்? பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மூலம் வழங்க தீர்மானம்
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் மாணவர்களுக்கு முறையாக காலை உணவு வழங்க தனியாரிடம் திட்டம் ஒப்படைக்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்சய பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஆளுனர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. அதேபோல வெங்காயம், பூண்டு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதைத் தொடர்ந்து காலை உணவுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவ்வாறே மாநிலம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவை மாநில அரசே வழங்கி வருகிறது.
சென்னை மாநகராட்சி தீர்மானம்
இதற்கிடையே சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தனியாரிடம் காலை உணவுத் திட்டத்தை ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
‘’சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் மாணவர்களுக்கு முறையாக காலை உணவு வழங்க தனியாரிடம் திட்டம் ஒப்படைக்கப்படும். இதற்காக கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
3 முறை அபராதம் விதிக்கப்படும்
ஒப்பந்ததாரர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிப்பது, தரம் குறைந்த உணவு வழங்கினால் 3 முறை அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகும் தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அதேஎபோல உணவு அளவு குறைதல், தரம் குறைந்த மூலப்பொருட்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்துதல், சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்’’.
கிளம்பும் எதிர்ப்பு
இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்காக ரூ.19 கோடி நிதி தனியாருக்கு ஒதுக்கப்படும் என்று கூட்டத்தில் கூறப்பட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும் இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
’’அரசே ஏற்று நடத்த வேண்டிய காலை உணவுத் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைத்தால் தரம் பாதிக்கப்படும். உணவு தெரிவில் அரசியல் நிகழும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.