வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு முறையான உடற்கல்விப் பாடத்திட்டத்தைச் செயல்படுத்திட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையானது மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆற்றல் மிக்க உடற்கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முன்முயற்சி மாணவர்களின் உடல் தகுதியை அதிகரிப்பது, நற்பண்புகளை உருவாக்குவது. சமூகத் திறன்களை மேம்படுத்துவதோடு அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்திலும் அதனைத் தொடர்ந்து நிலவிய கட்டுப்பாடுகள் காரணமாகவும் மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வழக்கமாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிக்காக விளையாட்டுத் திடல்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்தது.
மாணவர்களை உருவாக்குவதற்கான ஒரு முன்முயற்சி
இந்நிலையை மாற்ற, பள்ளி மாணவர்களுக்கு முறையான உடற்கல்விப் பாடத்திட்டத்தைச் செயல்படுத்திட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தற்போதைய நடைமுறைகளுக்கு ஏற்ப 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தக்கவகையில் வளமான மாணவர்களை உருவாக்குவதற்கான ஒரு முன்முயற்சியாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு- 2017இல் வலியுறுத்துவதுபோல், மாணவர்கள் நமது வளமான பண்பாடு, மரபு, வரலாறு, கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு அவற்றின் பெருமைகளைப் போற்றல் வேண்டும். இவற்றைக் கவனத்தில்கொண்டு மாணவர்களின் உடல் மற்றும் அறிவாற்றல் திறன்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
இது நமது பண்பாடு மற்றும் மரபு குறித்த அவர்களின் மதிப்புகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்கு உதவும். சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் (CWSN) இத்திட்டத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவது உறுதி செய்யப்படுள்ளது. மேலும், மாணவர்களின் உடல் திறன்கள் அல்லது வரம்புகளைப்பொருட்படுத்தாமல்.உடல்செயல்பாடுகள் எளிமையாகவும். இனிமையாகவும் அமைய சில மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன சிறப்பு அம்சங்கள்?
புதிய ஆத்திசூடியில் "உடலினை உறுதி செய்" எனப் பாரதியார் உடல் நலத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகிறார். உயர்நிலை வகுப்பு மாணவர்களிடையே நுண்தசை இயக்குத் திறனும். இயக்குநீர் (ஹார்மோன்) மாற்றமும் எற்படுகின்றன. எனவே இப்பருவத்தில் நரம்புத்தசை ஒருங்கிணைப்பு மற்றும் அடிப்படைத் திறன்களை மாணவர்களிடம் மேம்பாடு அடையச் செய்யவும். உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும். உடல் கல்வியறிவு, உடல் வளர்ச்சி. விளையாட்டுக் கல்வி, தமிழ் நாட்டுப்புற விளையாட்டுகள். மனமகிழ் விளையாட்டுகள், விளையாட்டு போட்டிகள், திட்டங்கள். ஆசனங்கள். மூச்சுப் பயிற்சிகள், விளையாட்டுக் காயங்கள், பாதுகாப்புக் கல்வி மற்றும் விளையாட்டுகளில் தொழில் வாய்ப்பு ஆகிய சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்பாடத் திட்டம் மாணவர்கள் விளையாட்டுத் திறன்களைப் பெறுவதற்கும் அவர்களின் பொறுப்புணர்வைச் சீரமைக்கவும் வழிவகுக்கும்.
மாணவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கவும். பதக்கங்களை வெல்லவும், சாதனை உணர்வை மேம்படுத்தவும். தங்களின் உடல் வலிமையை எண்ணிப் பெருமை கொள்ளவும் இத்திட்டம் வழிவகுக்கும். மேலும், மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்கும் தம்முயற்சியை முழுமனத்துடன் வரவேற்போம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.






















