EMIS: 'எமிஸ்' பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை: அமைச்சர் அன்பில் அதிரடி அறிவிப்பு
எமிஸ்-ல் புள்ளி விவரங்கள் பதிவு செய்வதில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
எமிஸ்-ல் புள்ளி விவரங்கள் பதிவு செய்வதில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை அளிக்கப்படும் என ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடியாக அறிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர். ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 390 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நேற்று (செப். 5ஆம் தேதி) மாலை வழங்கப்பட்டது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறையில் 170 ஆசிரியர்களுக்கும், தொடக்கக் கல்வித்துறையில் 169 ஆசிரியர்களுக்கும், 37 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், இரண்டு ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்களுக்கும், 2 மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும், எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் 10 பேர் என மொத்தம்390 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
''எங்கு சென்றாலும், எப்போது பார்த்தாலும் 'எமிஸ் பணிகள் அதிகமாக இருக்கின்றன. கற்பித்தலில் கவனம் செலுத்த முடிவதில்லை' என்று ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். எப்போதும் அரசுப் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடிப்பது என்னுடைய வழக்கம். நான் சொல்லாவிட்டால் கூட, கார் ஓட்டுநர் பள்ளிக்குள் விட்டுவிடுவார்.
அப்படி ஒரு முறை சென்றபோது, மதுரையில் மரத்துக்கு அடியில் ஆசிரியர் ஒருவர் போனை வைத்துக்கொண்டு, காத்திருப்பதைப் பார்த்தேன். அவரிடம் 'என்ன சார், செல்ஃபி எடுக்கிறீர்களா?' என்று கேட்டேன். அவர், 'எமிஸ் பணிக்காக இங்கே நிற்கிறேன். டவர் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது' என்றார். இவை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு கலந்து ஆலோசித்தோம்.
ஒரே மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும்
ஒரு மாதம் பொறுத்துக்கோள்ளுங்கள். இனிமேல் எமிஸ் வருகைப் பதிவேட்டை மட்டும் ஆசிரியர்கள் பதிவிட்டால் போதும் என்று தெரிவிக்கிறேன். EMIS திட்டம் (Educational Management Information System) மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான புள்ளி விவரங்களை பிஆர்டி (வட்டாரக் கல்வி அலுவலகர்கள்) மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம், இன்னும் ஒரே மாதத்தில் இது செயல்படுத்தப்படும்
ஆசிரியர்களிடையே பல்வேறு கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும். அரசின் நிதிநிலையைக் கொண்டு, ஒவ்வொரு கோரிக்கையும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இந்திய அளவில் தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித்துறை இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதைப் பெருமையாகச் சொல்கிறோம். இதை முதல் இடத்திற்குக் கொண்டு செல்ல ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும்''.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
எமிஸ் என்பது கல்வி மேலாண்மை தகவல் மையம் ஆகும். பள்ளி, மாணவர்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியது எமிஸ். பள்ளிக் கல்வித்துறை எமிஸ் வழியாக மாணவர்கள், நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை உள்ளிட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனினும் இதுதொடர்பான பணிகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.