அரசுப்பள்ளிகளுடன் கைகோத்த 1.4 லட்சம் முன்னாள் மாணவர்கள்; மேலும் இணைய கால அவகாசம்- கல்வித்துறை உத்தரவு
அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைக்கும் பணிகளை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைக்கும் பணிகளை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கூறி உள்ளதாவது:
''அரசுப் பள்ளியின் நலன் மீது பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களைக் கண்டறிந்து ஜூலை 28ஆம் தேதிக்குள் அவர்களின் தகவல்களை tnschools.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக முன்னாள் மாணவர்களுக்கான படிவத்தில் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அரசுப் பள்ளிகளுடன் கைகோத்த 1,41,287 முன்னாள் மாணவர்கள்
இதன் தொடர்ச்சியாக மாவட்ட அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முயற்சியால், ஜூலை 28ஆம் தேதி வரை 1,41,287 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியுடன் இணைந்து பயணிக்க முன்வந்துள்ளனர். அதில் 40 % பெண்களும், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பங்கேற்க முன்வந்துள்ளார்கள் என்பது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
இந்த முயற்சியில் 78 சதவீத மேல்நிலைப் பள்ளிகளிலும் 46 சதவீத உயர்நிலைப் பள்ளிகளிலும் 40 சதவீத நடுநிலைப் பள்ளிகளிலும் 28 சதவீத தொடக்கப் பன்ளிகளிலும் பதிவு செய்துள்ளார்கள். அதிக அளவில் முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைக்க ஏதுவாக இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஆகஸ்ட் 31 வரை கால நீட்டிப்பு அளிக்கப்படுகிறது.
1. குறைந்தபட்சம் 25 முன்னாள் மாணவர்கள் கொண்ட முன்னாள் மாணவர்கள் மன்றம் இருப்பதை அனைத்து அரசுப் பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும். மேதும். அதிகபட்சமாக விருப்பமுள்ள அனைத்து முன்னாள் மாணவர்களையும் பள்ளியுடன் ஒருங்கிணைக்கலாம்.
2. அண்மையில் தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட பன்ளிகளாக இருப்பின், குறிப்பாக தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பு முடிக்காத முன்னாள் மாணவர்கள் இருக்க வாய்ப்பு உள்ளதால், அப்பள்ளிகள் மட்டும் மாணகர்கள் பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் முன்னாள்
மாணவர்கள் மன்றம் உருவாக்க கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாணவர்கள் https://nammaschool.tnschools.gov.in/#/get-involved என்ற இணைப்பை க்ளிக் செய்து, திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்.