(Source: ECI/ABP News/ABP Majha)
Schools Enrollment: மோடி அரசில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 31% அதிகரிப்பு: மத்திய அரசு பெருமிதம்
மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு பழங்குடியின மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் சேர்வது 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
2014-15ஆம் ஆண்டுக்கும் 2021-22ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்,பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை 31% அதிகரித்து உள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளதாவது:
’’2014-15ஆம் ஆண்டுக்கும் 2021-22ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்,பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை 31% அதிகரித்து உள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவிகளின் மாணவர் சேர்க்கையும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு முன்னெடுப்புகளால், இந்த நேர்மறையான விளைவுகள் நடந்துள்ளன. 2014-ல் மோடி அரசு பதவியேற்ற பிறகு, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கை, 26.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல, பட்டியல் இன மாணவர் சேர்க்கையில் 44 சதவீத உயர்வும் ஆச்சரியப்படும் விதமாக பழங்குடி இன மாணவர்கள் சேர்க்கையில் 65 சதவீதமும் அதிகரித்துள்ளது.
80 சதவீதம் அதிகரிப்பு
மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு பழங்குடியின மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் சேர்வது 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்கள் மத்தியில் கல்வி ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்திய நாட்டை 2047-ல் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றவே கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது.
மோடி அரசின் அட்சிக் காலத்தில் திட்ட செயலாக்கத்தால், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 25 முதல் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல முஸ்லிம் மாணவிகள் மத்தியில் 45 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
பிராந்திய மொழிகளில் கல்வி
இந்தியாவின் சாரம் அதன் மொழிகளில் அடங்கி இருக்கிறது. மோடி அரசு, பிராந்திய மொழிகளில் கல்வியை அளிக்க முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மருத்துவக் கல்வியும் சட்டக் கல்வியும் இந்தி மொழியில் கற்பிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் புனே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மராத்தி மொழியில், பொறியியல் கற்பிக்கப்படுகிறது. அங்கு மாணவர்கள் இந்த ஆண்டு முதல் பட்டம் பெற உள்ளனர்.
காசி – தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் இந்திய மொழிகளின் முக்கியத்துவம் உறுதி செய்யப்படுகிறது’’.
இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: CAT Result 2023: கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் 100% பெற்று தேர்ச்சி- தமிழ்நாட்டில் எத்தனை?