2 வயதில் டாக்டர் பட்டம்: அதீத நினைவாற்றலால் குழந்தை ஆத்விக் அசத்தல் சாதனை
80 வயதில் டாக்டர் பட்டம், 90 வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், 2 வயதில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறது ஆத்விக் குமார் என்னும் குழந்தை.
80 வயதில் டாக்டர் பட்டம், 90 வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், 2 வயதில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் ஆத்விக் குமார். அதீத நினைவாற்றல் திறனால் அவருக்கு சர்வதேசத் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் முனைவர் (Record Breaking Doctor) பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சிவகாசி மாவட்டம், கவிதா நகரைச் சேர்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன் - சத்யா. ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவர்களின் 2 வயதுக் குழந்தை ஆத்விக் குமார். இவர் ஒன்றரை வயதிலேயே 180 விநாடிகளில் 150 வார்த்தைகளை தெளிவாகக் கூறி சாதனை படைத்தார். இவரின் அசாத்திய நினைவாற்றலைப் பாராட்டி, 2 வயதுக்குள்ளாகவே முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதைப் பெற்றோர்கள் கண்டுபிடித்து, ஊக்கப்படுத்தியது எப்படி?
இதுகுறித்து 'ஏபிபி நாடு'விடம் பேசினார் குழந்தையின் தாய் சத்யா. ''ஆரம்பத்தில் ஆத்விக்கை வெளியே அழைத்துச் செல்லும்போது சில இடங்களைக் காண்பித்துச் சொல்லிக்கொடுப்போம். நாங்களே அதை மறந்துவிட்டாலும், ஆத்விக் நினைவில் வைத்திருந்து சரியாகச் சொல்வார். போனில் எதையாவது பார்த்தால், அதை நேரில் பார்க்கும்போது ஞாபகப்படுத்திப் பேசுவார்.
சக குழந்தைகளின் பெயர், அவர்களின் அம்மா, அப்பா பெயரைக்கூட நினைவில் வைத்திருந்து சொல்வார். 1 வயது 3 மாதத்தில் இதைக் கண்டுபிடித்தோம்.
போனில் இருந்து மடைமாற்றம்
அதேபோல ஆரம்பத்தில் ஆத்விக் அதிக நேரம் போனைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதை மடைமாற்ற விரும்பியும், இந்த நடவடிக்கையை எடுத்தோம். அவரின் ஆர்வத்தைக் கண்டுபிடித்த பிறகு முறையாகக் கற்பிக்க ஆரம்பித்தோம்.
இப்போது சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல், தேசியத் தலைவர்களின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள், 40 வாகன லோகோக்களின் பெயர், கொடியை வைத்து 35 நாடுகளுடைய பெயர், சூரிய மண்டலம், பூக்கள், பறவைகளின் பெயர்கள், பொருட்களின் பெயர்கள், நல்ல பழக்கங்கள் என 700-க்கும் மேற்பட்ட பொருட்களின் பெயரை உடனடியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சொல்வார்.
1 வயது 8 மாதத்தில் இந்த சாதனையைப் படைத்துள்ளார் ஆத்விக். கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், வோர்ல்ட் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், யுனிவர்சல் அச்சீவர்ஸ் உள்ளிட்ட 6 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். 1 வயது, 8 மாதத்தில் இந்த சாதனையை ஆத்விக் படைத்துள்ளார். 2 வயதுக்குள், அதுவும் ஐந்தே மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
ஆத்விக் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே எங்களின் ஆசை. அவன் விரும்பினால் அதை நோக்கிய எங்களின் பயணம் தொடரும்'' என்கிறார் சத்யா.
குழந்தையின் திறமையை அறிந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஐஏஎஸ், அண்மையில் குழந்தை ஆத்விக்கை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார்.
2 வயதிலேயே டாக்டர் பட்டம் பெற்ற ஆத்விக், அடுத்தடுத்த உச்சம் தொட வாழ்த்துகள்!