அரசு கல்லூரியில் 1700 இடத்திற்கு 15 ஆயிரம் பேர் போட்டா போட்டி; தொடங்கிய மாணவர் சேர்க்கை
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 1,644 இடத்திற்கு 14,398 பேர் விண்ணப்பம்- கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 5600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 75 பேராசிரியர்களும், 180 கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
அரசு கல்லூரியில் இளநிலை, முதுநிலை என 22 பாடப் பிரிவுகளும், ஆறு வகை ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. இந்த கல்லூரியில் கணிதம், வேதியல், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், தாவரவியல், புள்ளியல், விலங்கியல், கணினி, கூட்டுறவு, வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு (சிஏ), வணிக நிர்வாகவியல், அறிவியல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இளங்கலை பாடப் பிரிவுகளில், காலை, மாலை இரண்டு சிப்ட் முறையில் பாடம் நடத்தப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் 93.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மற்றும் பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு போட்டி போட்டு கொண்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மட்டும் 16,398 மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,644 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் ஒரு இடத்திற்கு எட்டு பேர் என்ற கணக்கில் மாணவர்கள் போட்டியிட்டு விண்ணப்பித்துள்ளனர்.
தற்பொழுது ஒற்றைச் சார்ந்த முறையில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. மேலும் ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து மற்ற வேலை நாட்களில் கவுன்சிலிங் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
கடந்த பத்தாம் தேதி கவுன்சிலிங் தொடங்கி நிலையில் நாளை 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் தமிழ், ஆங்கிலம் மொழி சார்ந்த பாடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. மேலும் காட்சி வழி தொடர்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப் பணி, உளவியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. நேற்று அறிவியல் பாடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்று முடிந்தது. இன்று வரலாறு, பொருளியல், அரசியல், அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கலந்தாயில் நடைபெற்று வருகிறது. மேலும் பிற மாவட்டங்களில் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கும், வணிகவியல் பாடத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
ஆனால் தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் தமிழ் மொழி பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் பாடப் பிரிவு கேட்டு 4936 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் அரசியல், வரலாறு, விசுவல் கம்யூனிகேஷன், பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.