Cyber Security: கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முக்கிய அறிவிப்பு
சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த நடைமுறை வழிகாட்டுதல்களையும் சிறந்த நடைமுறைகளையும் வழங்குகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில், சைபர் பாதுகாப்பு என்பது தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. கல்வித் துறையிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், டிஜிட்டல் பாதுகாப்பு, தரவு தனியுரிமை மற்றும் பொறுப்பான ஆன்லைன் நடத்தை குறித்த விழிப்புணர்வையும், நல்ல பழக்கவழக்கங்களையும் வளர்ப்பது அத்தியாவசியம் ஆகிறது.
பாராளுமன்றக் குழுவின் பரிந்துரை
இதற்கிடையே பாராளுமன்ற நிலைக்குழு, தனது 254வது அறிக்கையில், "சைபர் குற்றங்கள் - விளைவுகள், பாதுகாப்பு மற்றும் தடுப்பு" என்ற தலைப்பில், உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் அல்லாத படிப்புகளிலும் சைபர் கல்வியை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது. சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமையின் அடிப்படைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
யுஜிசி கையேடு வெளியீடு
இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2024 நவம்பர் 6 அன்று "உயர்கல்வி நிறுவனங்களுக்கான சைபர் சுகாதாரத்தின் அடிப்படைகள் குறித்த கையேடு" (Handbook on Basics of Cyber Hygiene for Higher Education Institutions) ஒன்றை வெளியிட்டுள்ளது.
இக்கையேடு, சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த நடைமுறை வழிகாட்டுதல்களையும் சிறந்த நடைமுறைகளையும் வழங்குகிறது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நிறுவனங்களுக்கு யுஜிசி விடுத்த வேண்டுகோள்
இந்த நிலையில் யுஜிசி வெளியிட்டுள்ள இந்த கையேட்டைப் பின்பற்றி, உயர்கல்வி நிறுவனங்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது:
- கையேட்டை உங்கள் பல்கலைக்கழகம்/ கல்லூரி இணையதளத்தில் பதிவேற்றவும்.
- அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுடன் கையேட்டின் சாஃப்ட் காப்பியைப் பகிரவும்.
- உங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் கையேட்டைப் பிரபலப்படுத்தவும்.
- மாணவர் சேர்க்கை திட்டத்தின்போது, கையேட்டின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் ஒரு கட்டாய சைபர் பாதுகாப்பு அமர்வை நடத்தி, புதிய மாணவர்களுக்கு பாதுகாப்பான ஆன்லைன் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.
இந்த நடவடிக்கைகள் மூலம், உயர்கல்வி நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, டிஜிட்டல் உலகில் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என்று யுஜிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.























