CUET PG 2024: க்யூட் பொது நுழைவுத் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET PG 2024 Hall Ticket: முதுகலை பொது நுழைவுத் தேர்வுக்கான (க்யூட்) ஹால் டிக்கெட்டைத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு முதுகலை பொது நுழைவுத் தேர்வுக்கான (க்யூட்) ஹால் டிக்கெட்டைத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் முதுகலை படிப்புக்கு நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயம் ஆக்கப்படவில்லை.
தேர்வு எப்போது?
இந்த சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) தொடங்கி உள்ளது. இந்தத் தேர்வுகள் மார்ச் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
தற்போது மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது. தேர்வுக்கான முதல்கட்ட விடைத்தாள் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. எனினும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தெரியவில்லை.
கூடுதலாகத் தேர்வு மையங்கள்
இந்த நிலையில், கணினி முறையில் சுமார் 20 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. கடந்த முறை, நாடு முழுவதும் 547 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் க்யூட் தேர்வுக்காகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த முறை இதைவிடக் கூடுதலாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
* தேர்வர்கள் https://pgcuet.samarth.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்து ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
* தேர்வை எழுதும்போது கட்டாயம் ஹால் டிக்கெட்டை எடுத்துச்செல்ல வேண்டும்.
* தபாலில் ஹால் டிக்கெட் அனுப்பப்படாது.
* ஹால் டிக்கெட்டில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் பிரதிகள் எடுக்க அனுமதி இல்லை எனவும் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் 3 ஷிஃப்டுகளில் தலா 1.45 மணி நேரத்துக்குத் தேர்வு நடைபெற்று வருகிறது.
கூடுதல் தகவல்களுக்கு: https://nta.ac.in, https://pgcuet.samarth.ac.in
தொடர்புகொள்ள: 011 4075 9000
இ- மெயில் முகவரி: cuet-pg@nta.ac.in