அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!
தமிழக அரசைக் கண்டித்து, நாளை மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட அலுவலகங்கள் முன்பு கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்ட நடத்தப்பட உள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை விமர்சித்து சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கம் தீர்மானங்களை நிறைவேற்றுள்ளது.
CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம் அண்மையில் காணொளி வாயிலாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் இயக்க நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை தலைமைப் பொறுப்பேற்று களமாடிய முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன் பங்கேற்று ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
’’1. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற இயலாது என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்துமாறு உடனடியாக கண்டன அறிக்கை வெளியிடுவது.
2. அறுபது வயது வரை கண் துஞ்சாது கடமையாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை இருட்டாக்கும் தமிழக அரசைக் கண்டித்து, 14.11.2024 வியாழக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவ பணியிடங்கள், போக்குவரத்து பணியிடங்கள் உள்ளிட்ட பொதுத் துறை அலுவலகங்கள் முன்பு கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்துவது.
இதையும் வாசிக்கலாம்: நிறைவேற்றாத திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள்: போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர் சங்கம்!
அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை மாநாடு
3. மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை மாநாட்டை அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பினை உறுதிசெய்து படைகளைத் தயார் செய்வது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நாம் நம் எதிர்காலத்தலைமுறைக்கு செய்யும் மிகப் பெரும் துரோகம் ஆகும்..
போர்க்களம் காண பொங்கி எழு..
புறப்படு தோழா...
சமரசமின்றி களமாட..
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறைகூவி அழைக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.