பூப்பெய்திய மாணவியை வெளியே அமரவைத்த பள்ளி- சர்ச்சையானதை அடுத்து முதல்வர் சஸ்பெண்ட்!
இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம் 2007 விதிகளின்படி, பள்ளி முதல்வரின் செயல்பாடு தவறு என்பதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.- பள்ளி நிர்வாகம்

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே, தனியார் பள்ளி மாணவி பூப்பெய்தியதால் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டு பொதுத் தேர்வு எழுத வைக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணி இடைநீக்கம் செய்யபப்ட்டுள்ளார்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளியின் முதல்வரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 5ஆம் தேதி பூப்பெய்தியுள்ளார். தற்போது முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், 7ஆம் தேதி அந்த மாணவி தேர்வெழுத வந்துள்ளார். ஆனால் மாதவிலக்கை காரணம் காட்டி, அந்த மாணவியை பள்ளி நிர்வாகம் வெளியே அமர வைத்துத் தேர்வெழுத வைத்ததாகக் கூறப்படுகிறது.
பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி
மாணவிக்கு நேர்ந்த இந்த கொடுமையை கேள்விப்பட்ட அவரது தாய், நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் அது குறித்து கேட்டுள்ளார். ஆனால், அந்த பள்ளி நிர்வாகமோ, ’’எங்கள் பள்ளியில் இப்படித்தான் நடக்கும், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளியில் மாணவியை சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் தனியார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், ''தங்கள் பள்ளியில் 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஏப்ரல் 5ஆம் தேதி பூப்படைந்ததாகவும் முழு ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருப்பதால், மாணவியின் தாயார், பள்ளியின் முதல்வரிடம் தொலைபேசி மூலம் தேர்வெழுத அனுமதி கோரியுள்ளார்.
மாணவியின் தாய் கேட்ட அனுமதி
பள்ளி முதல்வர் ஆனந்தி, தேர்வெழுதாவிட்டால் பரவாயில்லை என்று கூறியும், மாணவியின் தாய் வெளியே தனியாக அமர்த்தி தேர்வெழுத அனுமதி அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால், தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம் 2007 விதிகளின்படி, பள்ளி முதல்வரின் செயல்பாடு தவறு என்பதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















