அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக பணியாளர்களை நியமிக்க தடை - நீதிமன்றம் உத்தரவு
anna university constituent colleges : அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில், காலி பணியிடங்களை, தற்காலிக பணியாளர்களைக் கொண்டு நிரப்ப நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி
தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கான பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள் பல்வேறு காலகட்டங்களில் தொடங்கப்பட்டன. காஞ்சிபுரம், திண்டிவனம் ,ஆரணி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருக்குவளை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்
இதேபோன்று பல்வேறு மண்டலங்களிலும், அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள் என்பதால், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கட்டுப்பாட்டில் இந்த கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில், தமிழ் வழியில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அது திரும்ப பெறப்பட்டது.
காலி பணியிடங்களை நிரப்ப
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும், உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு, தற்காலிக பணியாளர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பை கடந்த ஒன்றாம் தேதி " அண்ணா பல்கலைக்கழகம் " வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பணிபுரிவதற்கு தற்காலிகமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு மாதச் சம்பளம் 25,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது
- மெக்கானிக்கல் -10
- சிவில் -08
- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் - 10
- எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் - 22
- ஐ.டி. / கம்யூட்டர் சயின்ஸ் - 28
- மேலாண்மை படிப்புகள் -04
- S & H - கணிதம் -02
- S& H - இயற்பியல்-02
- S & H - வேதியியல் - 02
- S & H- ஆங்கிலம் - 02
மொத்தம் பணியிடங்கள் - 90
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில், பணியாற்றி வரும் தற்காலிக, பணியாளர்கள் ( Teaching Fellow ) மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கு விசாரித்த நீதிபதி, ஏற்கனவே கொடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நிரந்தர பணியாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தகைய வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், மீண்டும் 01.08.2023, Teaching Follow பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க உத்தரவு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.