மே மாதம் முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கான அரியர் தேர்வு - தமிழக அரசு தகவல்..
தமிழகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களுக்கான அரியர் தேர்வுகள் மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் நடத்த வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தகவல்..
தமிழகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களுக்கான அரியர் தேர்வுகள் மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் நடத்த வாய்ப்புள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இறுதி ஆண்டு பருவத்தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி முன்னதாக ரத்து செய்தார். மேலும், அரியர்ஸ் தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
அரியர் தேர்வுகளை நடத்தாமல் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அரியர் தேர்வுகளை ரத்துசெய்ய முடியாது என்று பல்கலைக்கழக மானியக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு, ஆன்லைன் மூலமாகவோ, ஆஃப்லைன் மூலமாகவோ அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், தேர்வு நடத்தும் தேதி குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டுமென்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது.