நெல்லை மாவட்ட +2 தேர்வு மையங்களை ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டார்
தேர்வு தொடங்குவதற்கு முன் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் காலை முதலே குவியத் தொடங்கினர். பின்னர் சிறப்பு பிரார்த்தனை செய்து மாணவ மாணவிகள் தேர்வு எழுத சென்றனர்.
தமிழகத்தில் பிளஸ்டூ என அழைக்கப்படும் 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் இன்று தொடங்கி உள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 10,315 மாணவர்கள், 11,439 மாணவிகள் என மொத்தம் 184 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 73 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வர்களுக்கு பாளையங்கோட்டை மத்திய சிறை உள்ளிட்ட நான்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு பணியில் 1500 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளன். தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் அடங்கிய 7 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.
இதுபோன்று அனைத்து மையங்களிலும் நிற்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 184 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி நெல்லை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் தேர்வின் போது சிறப்பு அனுமதி பெற்ற மாற்றுத் திறன் மாணவர்களுக்கு சொல்வதை எழுதும் பணிக்காக 187 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பான அனுமதி பெற்ற மாணவர்களுக்கான தேர்வு எழுதும் முறையை கண்காணிக்க 4 அறைக்கு ஒரு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வர்கள் தவிர்த்து மற்றவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தொடங்குவதற்கு முன் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் காலை முதலே குவியத் தொடங்கினர். பின்னர் சிறப்பு பிரார்த்தனை செய்து மாணவ மாணவிகள் தேர்வு எழுத சென்றனர். தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களை சுத்தப்படுத்தும் படி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில், நெல்லை மண்டலத்துக்குட்பட்ட தேர்வு மையங்களில் தூய்மை பணி நேற்று நடைபெற்றது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் சுகாதார அதிகாரிகள் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இன்று தேர்வு நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நெல்லை கத்தீட்ரல் பள்ளியில் தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..