Chennai Rains: விடுமுறை விடுங்க; கல்லூரி மாணவர்கள் கப்பலில் செல்வார்களா?- அரசை கிண்டலடிக்கும் ஜெயக்குமார்
இந்த நிலையில் விட்டுவிட்டுப் பெய்யும் மழை, தேங்கி நிற்கும் வெள்ளம் ஆகியவற்றுக்கு நடுவே கல்லூரிகளுக்குச் செல்வதில், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், மாணவர்கள் என்ன கப்பலில் கல்லூரிக்குச் செல்வார்களா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியது. இது தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
பாதிப்புக்குள்ளான பகுதிகள்
இதற்கிடையே சென்னை நகரின் பல்வேறு இடங்களில், மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வேளச்சேரி சுரங்கப் பாதை மூடப்பட்டுள்ளது. தி- நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபோல பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இருவர் பலி
இதற்கிடையே அசோக் நகரில் செல்போன் பேசிக் கொண்டு சென்ற நபர் ஒருவர் பலியானார். அதேபோல தி.நகரில் மின் கம்பம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது, மின்சாரம் தாக்கி 35 வயதான நபர் பலியானார். இருவரின் இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விட்டுவிட்டுப் பெய்யும் மழை, தேங்கி நிற்கும் வெள்ளம் ஆகியவற்றுக்கு நடுவே கல்லூரிகளுக்குச் செல்வதில், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையில், மாணவர்கள் என்ன, கப்பலில் கல்லூரிக்குச் செல்வார்களா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய அரசு. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். மாணவர்கள் என்ன கப்பலில் கல்லூரிக்குச் செல்வார்களா?’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களின் கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை மழை பாதிப்பு - உதவி எண்கள் அறிவிப்பு
சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி. மழை பாதிப்பு - 04425619204, 04425619206, 04425619207 மற்றும் 9445477205 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.