மாணவர்களுக்கு குட் நியூஸ்! 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறப்பு: கல்விக்கு புதிய பாதை!
நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல கல்வி விரிவாக்கத்திற்கு ரூ.5,862.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளிகளைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்தியக் கல்வித்துறை கீழ் இயங்கும் இந்தப் பள்ளிகளுக்காக அடுத்த 9 ஆண்டுகளில் (2026-27 முதல்) மொத்தம் ரூ.5,862 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.2,585.52 கோடியும், செயல்பாட்டுச் செலவுகளுக்காக ரூ.3,277.03 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்த பால்வாடிகள்
முக்கியமாக, இந்த 57 புதிய கேந்திரிய வித்யாலயாக்களிலும் முதல் முறையாக பால்வாடிகள் (Balvatikas) எனப்படும் மும்மொழி முன்-பள்ளி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இது தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் நோக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரிவாக்கம்
புதிய பள்ளிகள் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சீரான பிராந்தியப் பரவலை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்படும். இதில், ஏற்கெனவே கேந்திரிய வித்யாலயா இல்லாத 20 மாவட்டங்கள், 14 மேம்படுத்தப்பட்ட மாவட்டங்கள், தீவிரவாதம் (LWE) பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4, வடகிழக்கு மற்றும் மலைப்பகுதிகளில் 5 பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன
மாணவர்கள், வேலைவாய்ப்புப் பலன்கள்
ஒவ்வொரு கேந்திரிய வித்யாலயாவும் சுமார் 1,520 மாணவர்களைக் கற்கும் திறன் கொண்டது. புதிய 57 பள்ளிகள் முழுமையாக செயல்படும்போது, 86,000-க்கும் அதிகமான கூடுதல் மாணவர்கள் பயனடைவார்கள். மேலும், இது 4,617 நிரந்தர கற்பிக்கும் மற்றும் கற்பிக்காத பணியிடங்களை உருவாக்கும்.
13.62 லட்சம் மாணவர்கள் படிக்கும் கே.வி.
முதன் முதலில் 1962-ல் தொடங்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா சங்கதன், தற்போது மாஸ்கோ, காத்மாண்டு மற்றும் தெஹ்ரான் ஆகிய மூன்று வெளிநாட்டுக் கிளைகள் உட்பட நாடு முழுவதும் 1,288 பள்ளிகளை நடத்தி வருகிறது. ஜூன் 2025 நிலவரப்படி, சுமார் 13.62 லட்சம் மாணவர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த விரிவாக்கம், நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கும் ஒரு முக்கிய படி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.






















