CBSE Schedule: பள்ளிகளில் ஆக.31-க்குள் மாணவர் சேர்க்கை- சிபிஎஸ்இ உத்தரவு
பள்ளிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி மாணவர் சேர்க்கை, மாணவர்களின் பட்டியல் வெளியீடு, பாடங்களை மாற்றுவது, வருகைப் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மேற்கொள்வது குறித்து சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் அட்டவணை அண்மையில் வெளியானது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலைச் சமர்ப்பிக்கும் பணி ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும். செப்டம்பர் 13ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறலாம். அதேபோல தாமதக் கட்டணத்தைச் செலுத்தி செப். 14 முதல் 22ஆம் தேதி வரை மாணவர்களின் பெயர்ப் பட்டியலைச் சமர்ப்பிக்கலாம்.
நேரடி மாணவர் சேர்க்கை
10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் நேரடி சேர்க்கையைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் சேர்க்கைப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் தகவல் திரட்டப்பட்டு, பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பும் பணியும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
பாடப் பிரிவு மாற்றம்
அதேபோல பாடப் பிரிவை மாற்றக்கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, திருத்தப்பட்ட பாடப் பிரிவு விவரங்களை, பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பும் பணியும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
அதேபோல ஜனவரி 1 வரையிலான 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஜனவரி 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், ஜனவரி 15-க்குள் பள்ளிக்குத் தகவல் தெரிவிக்கப்படும். ஜனவரி 20ஆம் தேதிக்குள் தேவையான தகவல்களை அளிக்க் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ வெளியிட்ட அட்டவணையை முழுமையாகக் காண: https://www.cbse.gov.in/cbsenew/documents//Schedule_Activities_11082023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்வுகள் தேதி
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் 2023- 24-ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. சுமார் 55 நாட்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகள், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்து இருந்தது.
தமிழக மாணவர்களுக்கு எப்போது?
தமிழக மாநில பாடத்திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் 18ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.