CBSE Exam: இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: மாணவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி (இன்று) முதல் காலை 10.30 மணிக்கு தொடங்குகின்றன.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி (இன்று) முதல் காலை 10.30 மணிக்கு தொடங்குகின்றன. இன்று தொடங்கும் இந்த தேர்வானது மார்ச் 13ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைகிறது.
இந்த தேர்வை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 39 லட்சத்திற்கும் அதிகமாக மாணவர்கள் எழுதுகின்றனர். இந்தநிலையில், சி.பி.எஸ்.இ தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்குள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேர்வு காலத்தின்போது மாணவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செய்யக்கூடியவை:
- மாணவர்கள் தேர்வின்போது ஹால் டிக்கெட்டை (நுழைவு சீட்டு) கட்டாயமாக எடுத்து செல்ல வேண்டும்.
- காலை 10 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும்.
- கடைசி நேரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை விட குறைந்தது 15 நிமிடங்கள் முன்னதாக இருக்க வேண்டியது அவசியம்
- மாணவர்கள் பள்ளி சீருடைகளை கட்டாயம் அணிந்து தேர்வு அறைக்கு வர வேண்டும்.
- சிபிஎஸ்இ அனுமதிக்காத எந்தவொரு பொருளையும் தேர்வு அறையில் எடுத்துச் செல்லக்கூடாது.
- அடையாள அட்டைகள், பேனாக்கள், பென்சில்கள், அழிப்பான்கள் ஆகியவற்றை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
செய்யக்கூடாதவை:
- தேர்வு அறைக்குள் மொபைல் போன்கள் உட்பட எந்த வகையான தகவல் தொடர்பு சாதனமும் எடுத்து செல்லக்கூடாது.
- தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாத பொருட்களை கண்காணிப்பாளர்கள் பறிமுதல் செய்யலாம்.
- டைப்- 1 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளி அதிகாரிகளின் அனுமதிப்பெற்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- சர்க்கரை மாத்திரைகள், சாக்லேட், மிட்டாய், வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், சாண்ட்விச்கள் போன்ற சிற்றுண்டிகள் மற்றும் அதிக புரத உணவுகள், மருத்துவரின் பரிந்துரைப்படி தேவையான மருந்துகள், தண்ணீர் பாட்டில் (500 மில்லி) எடுத்து செல்லலாம்.
- இதற்கு பள்ளி, மாணவர் அல்லது மாணவரின் பெற்றோர் தேர்வு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக தேர்வு மையத்தை அணுகி, மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் குறித்து மையக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
வதந்திகளை நம்ப வேண்டாம்:
பல்வேறு சமூக ஊடக தளங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்த வதந்திகள் மற்றும் போலி தகவல்களை பெற்றொர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.
அதில், சிபிஎஸ்இயின் போலி சமூக ஊடகக் கணக்குகள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த கணக்குகளில் சிபிஎஸ்இ லோகோவுடன் தேர்வு அட்டவணைகள், தேர்வுதாள்கள் போன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை எதையும் நம்ப வேண்டாம்.
தேர்வு நேரத்தில் யூடியூப், பேஸ்புக், எக்ஸ், டெலிகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் பரப்பப்படும் அதையும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தது.