CBSE Board Date Sheet: 10, பிளஸ் 2 தேர்வு தேதிகளை அறிவித்த சிபிஎஸ்இ: முக்கிய விதிமுறைகள் இவைதான்!
CBSE Board Exam Date Sheet: 10ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் பொதுத் தேர்வு தொடங்குகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 அன்று தொடங்குகின்றன.
ஏற்கெனவே 2025 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் 15.02.2025 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விதிமுறைகள் என்ன?
நாடு முழுவதும் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்பட உள்ள நிலையில், எந்தத் தேர்வின் காம்பினேஷனும் ஒரே நாளில் அமையாதவாறு திட்டமிட்டு அறிவித்திருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதனால், சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட காம்பினேஷன்கள் ஒரே நேரத்தில் வந்து மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது.
தேர்வில் 33 சதவீத மதிப்பெண்களை எடுத்தால் தேர்ச்சி என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ கூறி இருந்தது.
அதேபோல புத்தகத்தைப் பார்த்து எழுதும் முறை கொண்டு வரப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்வு வரலாற்றில் முதல் முறை
சிபிஎஸ்இ தேர்வு வரலாற்றில் முதல் முறையாக 86 நாட்களுக்கு முன்னதாக, தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இது 2024 அட்டவணையோடு ஒப்பிடும்போது, 23 நாட்கள் முன்னதாகும்.
இதன்மூலம் மாணவர்கள் பதற்றம் இல்லாமல், முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வுக்குத் தயாராக முடியும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
10ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் பொதுத் தேர்வு தொடங்குகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கும், 22ஆம் தேதி பிரெஞ்சு, சமஸ்கிருதப் பாடத்துக்கும் தேர்வு நடைபெற உள்ளது.
பிப்.25ஆம் தேதி சமூக அறிவியல் தாளுக்கும் 27ஆம் தேதி தமிழ், பெங்காலி, உருது உள்ளிட்ட மொழித் தாள்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. பிப்.28ஆம் தேதி இந்தி, மார்ச் 10ஆம் தேதி கணிதம், மார்ச் 18ஆம் தேதி கணினி பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
12ஆம் வகுப்பு அட்டவணை
பிளஸ் 2-க்கும் தொழில்முனைவோர் பாடத்துடன் பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அடுத்தடுத்த தினங்களில் வெவ்வேறு பாடங்களுக்குத் தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
https://www.cbse.gov.in/cbsenew/documents/Date_Sheet_Main_Exam_2025_20112024.pdf என்ற இணைப்பில், பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.