CBSE Board Exam: விவசாயிகள் போராட்டம்: தொடங்கிய சிபிஎஸ்இ தேர்வுகள் - மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
CBSE Board Exam 2024: டெல்லி என்சிஆர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதை அடுத்து, சிபிஎஸ்இ பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. டெல்லி என்சிஆர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதை அடுத்து, சிபிஎஸ்இ பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கே மாணவர்கள் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ,12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று (பிப்ரவரி 15ஆம் தேதி) ஒரே நாளில் தொடங்கி உள்ளன. எனினும் 10ஆம் வகுப்புக்கு மார்ச் 13 அன்று தேர்வு முடியும் நிலையில், 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தேர்வுகள் முடிகின்றன. தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக நடைபெற உள்ளது.
39 லட்சம் பேர் எழுதும் தேர்வு
இந்தியா மற்றும் 26 நாடுகளைச் சேர்ந்த 39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். டெல்லியில் 877 தேர்வு மையங்களில், 5,80,192 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.
இந்த நிலையில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’’டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தேர்வு மையத்துக்கு வரத் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம்.
महत्वपूर्ण घोषणा pic.twitter.com/wdHCNGac9l
— CBSE HQ (@cbseindia29) February 14, 2024
மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
அதனால், அனைத்து மாணவர்களும் முன்னதாகவே வீட்டில் இருந்து கிளம்பி, தேர்வு மையத்துக்கு வர வேண்டும். வழக்கம்போல இயங்கும் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வானிலை, போக்குவரத்து நிலை, உள்ளூர் சூழல், தூரம் ஆகியவற்றை மனதில் வைத்து நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே செல்லத் திட்டமிட வேண்டும்.
10 மணிக்குள் மாணவர்கள் கட்டாயம் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். அதற்குப் பிறகு எந்த மாணவரும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இதுகுறித்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளையும் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அறிவிக்கப்படாது
மாணவர்களின் மன நலன் கருதி இந்த ஆண்டு முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அறிவிக்கப்படாது என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களை அறிய: https://cbseacademic.nic.in/index.html- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
முழு தகவல்களுக்கு: https://www.cbse.gov.in