CBSE 10th Result 2022: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவுகளை அறிய முடியாமலும், கல்லூரியில் சேர முடியாமலும் தவித்து வந்தனர்.
இச்சூழலில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலிடத்தில் திருவனந்தபுர மண்டலம்
மண்டல வாரியான தேர்ச்சியைப் பொறுத்தவரை, கேரளாவின் திருவனந்தபுர மண்டலம் 98.83 சதவீதத் தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரயாக்ராஜ் (அலகாபாத்) மண்டலம் கடைசி இடத்தில் உள்ளது. இந்த மண்டல மாணவர்கள், 83.71 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள cbse.gov.in, results.cbse.nic.in ஆகிய லிங்க்கை மாணவர்கள் கிளிக் செய்யவும்.
இரண்டு பருவத் தேர்வுகள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பொதுத்தேர்வு நடைபெற முடியாமல் போவதைத் தவிர்க்கும் வகையில், 2021-22ஆம் ஆண்டு பொதுத்தேர்வு இரண்டு பருவங்களாக நடத்தப்பட்டது. நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற முதல் பருவத் தேர்வில், கொள்குறி வகை வினாக்களும் இரண்டாம் பருவத் தேர்வில் பகுப்பாய்வு வகை அடிப்படையிலான கேள்விகளும் இடம்பெற்றன.
இந்த நிலையில் முதல் பருவம், இரண்டாம் பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படவுள்ளது. உள் மதிப்பீடு மதிப்பெண்கள், திட்டப்பணிகள், நடைமுறைத் தேர்வுகள், பொது தேர்வுக்கு முந்தைய தேர்வு உள்ளிட்ட விவரங்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறவுள்ளது.
உயர் கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கிய நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்