Periyar University: சர்ச்சைகளின் கூடாரமா சேலம் பெரியார் பல்கலை? புத்தகம் வெளியிடக்கூடாது என்ற சுற்றறிக்கையால் சர்ச்சை!
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் நிர்வாகப் பணியாளர்களும் புத்தகங்களை வெளியிடக் கூடாது என்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் நிர்வாகப் பணியாளர்களும் புத்தகங்களை வெளியிடக் கூடாது. அவ்வாறு வெளியிட முன் அனுமதி பெற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றி வரும் பேராசிரியர்களும் நிர்வாகப் பணியாளர்களும் புத்தகங்களை வெளியிடக் கூடாது என்று பல்கலை. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’’அனுமதி பெறாமல் மற்றும் அனுமதி பெற்று வெளியிடப்பட்ட புத்தகங்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் இதைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல ஊடகங்களிலும் தாங்களாகப் எந்தப் பேட்டியும் அளிக்கக் கூடாது. இவை அனைத்துக்கும் முன் அனுமதி பெற வேண்டும்’’ என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.
தொடரும் சர்ச்சை
முன்னதாக, தந்தைப் பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ’’பெரியாரின் போர்க்களங்கள்” என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இதழியல் துறை இணைப் பேராசிரியரும் பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குனருமான இரா.சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்க, சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. சுப்பிரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பாணை அனுப்பியது சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக் குழு அமைப்பு
அதேபோல சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுவதாக வரபெற்ற புகார்கள் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக் குழு அமைத்தது. குறிப்பாக உயர்கல்வித் துறை அரசு கூடுதல் செயலாளர் சு.படினிசாமி மற்றும் அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா கேட்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
துணை வேந்தர் கைது
எல்லாவற்றுக்கும் மேலாக பெரியார் பலகலை கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாநகர் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.