குழந்தைகளின் கல்விக்கு ஆபத்து! ஸ்க்ரீன் டைம் வாசிப்பு, கணித திறனை எப்படி பாதிக்கிறது? புதிய ஆய்வில் தகவல்!
சிறு வயதில் குழந்தைகள் அதிக திரை நேரத்தைச் செலவிட்டால், பள்ளிக்குச் செல்லும்போது அவர்களின் வாசிப்பு மற்றும் கணித மதிப்பெண்கள் குறைவாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

அதீதமான செல்போன் திரை நேரம் குழந்தைகளின் வாசிப்பு, கணித திறனை பாதிக்கும் என்று புதிய ஆய்வொன்றில் தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட் போன்கள் வருவதற்கு முன்பே, தொலைக்காட்சிகள் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கான முக்கிய ஆதாரமாக இருந்தன. கார்ட்டூன்கள், விளையாட்டுகள், குழந்தைகளுக்கான சீரியல்கள் அதிகம் பார்க்கப்பட்டன. அப்போதே, அதிக திரை நேரம் உடல் உழைப்பின்மையுடன் தொடர்புபடுத்தப்பட்டது.
ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஸ்மார்ட் போன்
தற்போது, ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருப்பதால், இந்த தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அதிகப்படியான திரை நேரம், குழந்தைகளின் கல்வித் திறனையும் பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.
ஒரு புதிய ஆய்வு, சிறு வயதில் குழந்தைகள் அதிக திரை நேரத்தைச் செலவிட்டால், பள்ளிக்குச் செல்லும்போது அவர்களின் வாசிப்பு மற்றும் கணித மதிப்பெண்கள் குறைவாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
இந்த ஆய்வு 2008 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 5,000-க்கும் மேற்பட்ட கனடா குழந்தைகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில் 3ஆம் வகுப்பு குழந்தைகள் (எட்டு முதல் ஒன்பது வயது) 3,322 பேரும், 6 ஆம் வகுப்பு குழந்தைகள் (11 முதல் 12 வயது) 2,084 பேரும் அடங்குவர்.

குழந்தைகளின் திரை நேரம்
இந்த ஆய்வுக்காக, குழந்தைகளின் திரை நேரம் (டிவி, டிஜிட்டல் மீடியா நேரம் மற்றும் வீடியோ கேம் விளையாடும் நேரம்) குறித்த தகவல்களை பெற்றோர்கள் வழங்கினர். பின்னர் ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தரவை, கல்வித் தரம் மற்றும் பொறுப்புக் கூறல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட தரப்படுத்தப்பட்ட சோதனைகளில் குழந்தைகளின் செயல் திறனுடன் ஒப்பிட்டனர்.
குறிப்பாக 3ஆம் வகுப்பில் வாசிப்பு மற்றும் கணிதம் மற்றும் 6 ஆம் வகுப்பில் கணிதம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
குறையும் திறன்கள்
ஜமா நெட்வொர்க் ஓபனில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, சிறு குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரத்துக்கு கூடுதலாக, செல்போனில் நேரம் செலவிடுவது, சிறந்த கல்வி மதிப்பெண்களைப் பெறுவதற்கான வாய்ப்பை 9% குறைக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. மூத்த குழந்தைகளிடையே, இது கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்பில் 10% குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும் வாசிப்பு மற்றும் கணிதத்தில் மதிப்பெண்கள் எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டாலும், திரை நேரம் குழந்தைகளின் எழுதும் திறனை அதிகம் பாதிக்கவில்லை.
இந்த ஆய்வின் கூற்றுப்படி, ஆரோக்கியமான திரை பயன்பாட்டுப் பழக்கங்களை மேம்படுத்தவும், தொடக்கப் பள்ளியில் கல்வி சாதனைகளை அதிகரிக்கவும் ஸ்க்ரீன் நேரத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















