அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவ, மாணவிகள்: பாராட்டி பரிசுகள் வழங்கிய தஞ்சை எம்.பி.,
இந்த ஆண்டு மாநில அளவில் 12-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதேபோல் பிளஸ் 2வில் மாநில அளவில் கடந்த ஆண்டு 26ம் இடம் பெற்றிருந்த தஞ்சாவூர் இந்த ஆண்டு 23ம் இடம் பெற்றுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் மணக்குடி சட்டமன்ற தொகுதி அளவில் 2024-25 அரசு பொது தேர்வில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 100 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா தஞ்சாவூரில் எம்பி அலுவலகத்தில் நடந்தது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி ஏற்பாட்டில் அரசு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சார்ந்த அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவ, மாணவிகள் தர வரிசைப்படி தேர்வு செய்யப்பட்டு பாராட்டு விழா எம்பி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளை பாராட்டி பேசினார். முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பழனிவேல், தஞ்சாவூர் எம் எல் ஏ டி .கே.ஜி. நீலமேகம், தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேலு, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வரவேற்புரையாற்றி பேசுகையில், அரசு பொதுத்தேர்வில் 10 மற்றும் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்துவது என முடிவு செய்தோம். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் மாநில அளவில் 15ம் இடம் பெற்றது. இந்த ஆண்டு மாநில அளவில் 12-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதேபோல் பிளஸ் 2வில் மாநில அளவில் கடந்த ஆண்டு 26ம் இடம் பெற்றிருந்த தஞ்சாவூர் இந்த ஆண்டு 23ம் இடம் பெற்றுள்ளது.
கல்வி நிலையில், கல்வியின் தரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இதற்காக உழைக்கும் அனைத்து ஆசிரிய, ஆசிரியர்களை பாராட்டுகிறேன். இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த பத்தாம் வகுப்பில் 55 மாணவ, மாணவிகள், 12ம் வகுப்பில் 45 மாணவிகள் என மொத்தம் 100 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி சந்தன மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பாராட்டு கேடயம், புத்தகப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ராகவ் மகேஷ், அருள் ராஜன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.




















