Anna University: வலுத்த எதிர்ப்புகள்: தமிழ்வழிக் கல்வி பாடப்பிரிவு நீக்கம் வாபஸ்- அண்ணா பல்கலை. அறிவிப்பு
தமிழ் வழிக் கல்வி பாடப்பிரிவுகள் கற்பிப்பது நிறுத்தப்பட்டதாக வெளியான அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் வழிக் கல்வி பாடப்பிரிவுகள் கற்பிப்பது நிறுத்தப்பட்டதாக வெளியான அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர்,பண்ருட்டி, புதுக்கோட்டை, திருக்குவளை , நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட 11 இடங்களில் இயங்கி வருகின்றன. இதில் தமிழ் வழியில் கல்வி பயிலும் விதமாக உறுப்புக் கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில், மின் மற்றும் மின்னணு பொறியியல் பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தன.
மானவர் சேர்க்கை குறைந்ததை அடுத்து, இந்த ஆண்டு முதல் தமிழ் வழிக் கல்வியில் கற்பிக்கப்படும் பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்குக் கடும் எதிர்ப்புகள் குவிந்தன.
குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர், தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ராமதாஸ் கூறும்போது, ’’உறுப்புக் கல்லூரிகள் மூடப்படுவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய இரு தரப்பினரும் பாதிக்கப்படுவர். அவற்றில் தற்காலிகமாக பணியாற்றி வந்த ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள். பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றியவர்களால் இப்போது வேறு கல்லூரிகளுக்கு சென்று பணியில் சேர முடியாது. அதனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். அவர்கள் மட்டுமின்றி, உறுப்புக் கல்லூரிகளில் மிகக்குறைந்த கட்டணத்தில் கட்டிடவியல் அல்லது இயந்திரவியல் படிக்கும் வாய்ப்பையும் அக்கல்லூரிகள் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இழப்பர். இது உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை பாதிக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.
துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு
இதை அடுத்து, தமிழ் வழிக் கல்வி பாடப்பிரிவுகள் கற்பிப்பது நிறுத்தப்பட்டதாக வெளியான அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ’’அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் படிப்புகளுக்குக் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. குறிப்பாக 60 மாணவர்கள் படிக்க வேண்டிய இடத்தில், 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வந்தனர். இதனால் ஆங்கில வழிக் கல்வி மற்றும் தமிழ் வழிக் கல்வி என இரண்டு வகை மாணவர் சேர்க்கையையும் தற்காலிகமாக நிறுத்தி இருந்தோம்.
அது தமிழ் வழிக் கல்வி புறக்கணிப்பு என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சரின் ஆலோசனையின்படி இருவழிக் கல்விக்கான பாடப் பிரிவுகளும் மீண்டும் செயல்படும்’’ என்று துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ’’அண்ணா பல்கலைக்கழகம் முதன்மை வளாகம் மற்றும் திருச்சி வளாகங்களில் சிவில், மெக்கானிக்கல் தமிழ் பாடப்பிரிவுகள் முழுமையாக நிரம்பிவிடும். எனினும் பிற உறுப்புக் கல்லூரிகளில் இரண்டு வகைக் கல்வி பாடப்பிரிவுகளிலும் மாணவர் இடங்கள் முழுமையாக நிரம்புவதில்லை’’ என்று துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.