Anna University: இந்த ஆண்டு அண்ணா பல்கலை. தேர்வு, சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் பொன்முடி உறுதி
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு, சான்றிதழ் கட்டணம் இந்த கல்வி ஆண்டில் உயர்த்தப்படாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு, சான்றிதழ் கட்டணம் இந்த கல்வி ஆண்டில் உயர்த்தப்படாது என்றும் அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் அமலில் இருக்கும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கான பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லுரிகளில் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவை 50% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டண உயர்வு எவ்வளவு?
இளங்கலை செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு, இன்டர்னல் தேர்வுகளுக்கு – ஒவ்வொரு தாளுக்கும் தலா ரூ.150 ஆக இருந்த தேர்வுக் கட்டணம், ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இளங்கலை ப்ரொஜெக்ட் தீசிஸ்-க்கு தேர்வுக் கட்டணம் 300 ரூபாயாக இருந்தது. தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல முதுகலை செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு, இன்டர்னல் தேர்வு, மினி ப்ரொஜெக்ட், கோடைக்கால ப்ரொஜெக்ட் ஆகிய அனைத்துக்கும் தாள் ஒன்றுக்கு முன்பு தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்தது. அது தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம்
அதேபோல முதுகலை ப்ரொஜெக்ட் வேலைக்கு, ஒவ்வொரு கட்டத்துக்கும் 600 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ’’பொதுவாக பல்கலைக்கழகங்களில் எல்லா பாடங்களுக்கும் தேர்வுக் கட்டணம் என்பது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அந்த அடிப்படையில் ஒருசில பல்கலைக்கழகங்களில் தேர்வுக் கட்டணம் குறைவாக இருக்கிறது. சிலவற்றில் அதிகமாக இருக்கிறது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் குறைவாக இருந்ததால் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆண்டுக்கு தேர்வுக் கட்டணம் கட்டாயம் உயர்த்தப்படாது. வரும் காலத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களை அழைத்துப் பேசி, ஒரே கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த ஆண்டு மாணவர்கள் வழக்கமான கட்டணத்தைக் கட்டினால் போதும்.
வினாத்தாள் மாறிய விவகாரம்
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட புகாரில், அரசு விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக வினாத்தாள் குழு மீது விசாரணை நடத்த, உயர் கல்வித்துறை செயலாளரிடம் கூறி இருக்கிறோம். வருங்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழக்கூடாது என்று எச்சரித்து உள்ளோம்’’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.