Anbil Mahesh intermediate teachers: இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு- அன்பில் மகேஷ் அதிரடி
Anbil Mahesh intermediate teachers: ஊதிய முரண்பாட்டிற்கு எதிராக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக நிதித் துறையிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும், இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கை
ஆசிரியர்கள் தான் மாணவர்களின் வழிகாட்டியாக உள்ளனர். எனவே மாணவர்கள் கல்வியில் உயர்ந்து நல்ல நிலைக்கு செல்வதற்கு ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில், ஆசிரியர்களும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்தோடு, தற்போது அனைத்து சலுகைகளுடன் சுமார் ரூ.28,000 - ரூ.30,000 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. அதே நேரம் 2009 ஜூன் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 மட்டுமே வழங்கப்படுகிறது. இதோடு சலுகைகளுடன் சேர்த்து சுமார் ரூ.20,600 மட்டுமே வழங்கப்படுகிறது.
ஒரே தகுதி, ஒரே வேலை- ஆனால் ஊதியம் வேறு
இதன் காரணமாக ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன்னர். ஒரே தகுதி, ஒரே வேலை செய்த போதிலும் இந்த ஊதிய முரண்பாட்டால் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே கடந்த 16 ஆண்டுகளால் தொடரும் இந்த நிலையை தற்போது திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 2021ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரிசெய்வோம் என வாக்குறுதி அளித்துள்ளதாகவும், ஆனால் கடந்த 5ஆண்டுகளாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம்
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகால முக்கிய கோரிக்கையாக இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்படும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இதே போல இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படுமா.? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார். சென்னையில் 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.8 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தக கண்காட்சி மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிதித்துறையிடம் பேசி விரைவில் நல்ல முடிவு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் போதே, அடுத்த ஊதியக் குழு வந்துவிட்டது. இதன் காரணமாக ஊதிய உயர்வு இல்லாமல் சம்பளம் குறைந்துவிட்டது. இதனையடுத்து தான் சம்பள வேறுபாட்டை களைய ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இடைநிலை ஆசிரியர்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள். எனவே இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம்.
அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நிதித் துறையிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற முழு தகவல் உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் கட்டாயமாக இடைநிலை ஆசிரியர்களுக்காக வாதாடுவேன். நல்ல முடிவு கிடைக்கும் என அன்பில் மகேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.





















