NEET Impact: தமிழ்வழி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பை எட்டாக்கனியாக்கியதா நீட்? ஏ.கே.ராஜன் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ்வழி மாணவர்கள் சொற்ப அளவில் மட்டுமே சேர்ந்து வருவது ஏ.கே.ராஜன்குழு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு என்ன என்பதை புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து கூறியுள்ளனர்.
இந்த அறிக்கையில் 2010-ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையையும், கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கை வரை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு வருகைக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவிலே இருந்துள்ளது என்ற வேதனைக்குரிய தகவல் தெரியவந்துள்ளது.
நீட் தேர்வு அமலுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 646 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட 2017ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை தமிழ்வழியில் பயின்ற 545 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு முன்பு தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை :
2010- 2011 :
மொத்த இடங்கள் - 2349
தமிழ் வழி மாணவர்கள் - 465
2011-2012 :
மொத்த இடங்கள் – 2543
தமிழ் வழி மாணவர்கள் - 459
2012-2013
மொத்த இடங்கள் - 2707
தமிழ் வழி மாணவர்கள் - 503
2013- 2014
மொத்த இடங்கள் - 3267
தமிழ் வழி மாணவர்கள் - 570
2014-2015
மொத்த இடங்கள் - 3147
தமிழ்வழி மாணவர்கள் - 602
2015-2016
மொத்த இடங்கள்- 3015
தமிழ்வழி மாணவர்கள் - 510
2016-2017
மொத்த இடங்கள் – 3608
தமிழ் வழி மாணவர்கள் - 537
நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை :
தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பின்வருமாறு:
2017 – 2018 :
மொத்த இடங்கள் – 3517
தமிழ்வழி மாணவர்கள் - 56
2018-2019
மொத்த இடங்கள் – 3638
தமிழ்வழி மாணவர்கள் - 119
2019-2020
மொத்த இடங்கள் – 4202
தமிழ்வழி மாணவர்கள் - 71
2020 -2021:
மொத்த இடங்கள் – 4129
தமிழ்வழி மாணவர்கள் - 82
கடந்தாண்டு தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 336 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். அவர்களில் 217 பேர் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள்.