போலி கணக்கு காட்டிய விவகாரம்; அரசுப்பள்ளி மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய உத்தரவு
எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில்தான் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், சீருடைகள், மிதிவண்டி, லேப்டாப்புகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் விவரங்கள் எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் சேகரிக்கப்படுவது வழக்கம். இதில் மாணவர்களின் விவரங்கள் உள்ளிடப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
எமிஸ் தளத்தில் ஏற்றப்பட்டு இருக்கும் விவரங்கள்
எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில்தான் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள், சீருடைகள், மிதிவண்டி, லேப்டாப்புகள் போன்ற பல்வேறு பொருட்களும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல பள்ளிகளுக்கான பராமரிப்புத் தொகையும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகத் தெரிவிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதன் மீதான ஆய்வில், போலியாக கணக்கு காட்டியுள்ளது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் தவறு செய்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அதன் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய உத்தரவு
இந்த சம்பவத்தை அடுத்து அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி எமிஸ் தளத்தில் உள்ள எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை உறுதிசெய்ய வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் இருப்பதை கண்டறிந்தால், உடனடியாக அந்த விவரங்களை தொடக்கக் கல்வி இயக்கககத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.