Madurai | ஒரே அரசுப்பள்ளியில் இருந்து மருத்துவராகும் 4 மாணவிகள்: அசத்தும் மதுரை மாநகராட்சிப்பள்ளி
மதுரை அருகே ஒரே அரசுப் பள்ளியில் படித்த 4 மாணவிகள், 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்கத் தேர்வாகி உள்ளனர்.
மதுரையில் ஒரே மாநகராட்சி அரசுப் பள்ளியில் படித்த 4 மாணவிகள், 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்கத் தேர்வாகி உள்ளனர்.
நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர ஆண்டுதோறும் நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 9 பேர் தேர்ச்சி பெற்று, அண்மையில் சாதனை படைத்தனர்.
குறிப்பாக அப்பள்ளி மாணவி பிரியங்கா நீட் தேர்வில் 414 மதிப்பெண்கள் பெற்று, மதுரை மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் மாநில அளவிலான தர வரிசையில், 25ஆவது இடம்பிடித்தார். தீபா ஸ்ரீ என்னும் மாணவி 301 மதிப்பெண்கள் பெற்று, 179ஆவது இடத்தைப் பிடித்தார்.
மாணவி வினோதினி 283 மதிப்பெண்கள் பெற்று, 231வது இடத்தையும், சங்கீதா 258 மதிப்பெண்கள் பெற்று, 319ஆவது இடத்தையும், கவுசல்யா 226 மதிப்பெண்கள் பெற்று, 461ஆவது இடத்தையும் பிடித்தனர். இந்த அரசுப் பள்ளி மாணவிகள் அனைவருமே முதல் முறையாக நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவருக்கும் இன்று (ஜன.28) சென்னையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், மாணவி பிரியங்காவுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. தீபா ஸ்ரீக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. வினோதினி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் சங்கீதா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியிலும் சேர உள்ளனர். கவுசல்யாவுக்கு பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த நிலையில், அதைத் தேர்ந்தெடுக்காமல், அடுத்தகட்டக் கலந்தாய்வில் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் துணை தலைமை ஆசிரியரும் நீட் திட்ட ஒருங்கிணைப்பாளருமான பாலுமணி 'ஏபிபி நாடு'விடம் பேசும்போது, ''எங்கள் பள்ளி மாணவிகள் அனைவருக்கும் 11ஆம் வகுப்பில் இருந்தே 2019 முதல் 2021 வரை 2 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
வெவ்வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தனர். இதற்கான நிதி உதவியை மதுரை மாநகராட்சி அளித்தது. மாணவர்களுக்கான பயிற்சி நூல்கள், என்சிஇஆர்டி புத்தகங்கள் உள்ளிட்ட தேர்வு கையேடுகளும் வழங்கப்பட்டன'' என்று தெரிவித்தார்.
மாணவி பிரியங்கா கூறும்போது, ''பள்ளியில் தினந்தோறும் எங்கள் அனைவருக்கும் சிறப்பாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையர் நாங்கள் படிக்கத் தொடர்ந்து ஊக்கம் கொடுத்தார். கொரோனா காலகட்டத்திலும் வகுப்புகள் தடைபடவில்லை. ஆன்லைன் மூலமும் வகுப்புகள் எடுக்கப்பட்டு, தொடர்ந்து படித்தோம். கடுமையாக முயற்சி செய்ததால் வெற்றி வசப்பட்டது'' என்று தெரிவித்தார்.
ஒரே முயற்சியில் 4 மருத்துவர்களை உருவாக்கித் தந்த மதுரை மாநகராட்சி பெண்கள் அரசுப் பள்ளியின் சாதனைக்கு, அப்பகுதி மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.