ஸ்கூலு இருக்கு.. ஆளே இல்ல.. ஒரு மாணவர்கூட இல்லாத 22 பள்ளிகள்! அதிர்ச்சி ஏற்படுத்திய தகவல்!
தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் உள்ளனர் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் உள்ளனர் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள், மாணவர் சேர்க்கை குறித்து 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருவதாகவும் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ’’மாநிலம் முழுவதும் உள்ள 11 அரசுப் பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். 24 பள்ளிகளில் தலா 2 மாணவர்களும், 41 பள்ளிகளில் தலா 3 மாணவர்களும் படித்து வருகின்றனர். அதேபோல 50 பள்ளிகளில் தலா 4 மாணவர்களும், 77 பள்ளிகளில் தலா 5 மாணவர்களும், 114 பள்ளிகளில் தலா 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் தலா 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் தலா 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் தலா 9 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஒரு மாணவர் கூட இல்லாமல் 22 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்காகப் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உதவியுடன் பள்ளிகள் திறக்கப்பட்ட மறு நாளன்று (ஜூன் 14-ம் தேதி), மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 3,131 பள்ளிகளில் 10 முதல் 60 மாணவர்கள் வரை படிக்கின்றனர். அங்கு தலைமை ஆசிரியரே 5 வகுப்புகளை நடத்தும் சூழல் இருக்கிறது. அதேபோல 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன, அங்கெல்லாம் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும், பயிற்சியில் பங்கேற்ற நாட்களுக்கு பின்னர் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 31,336 பள்ளிகளில் 1,08,537 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 25,50,997 மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்